உ.கோ நெதர்லாந்து அணியில் சென்னை ஃபுட் டெலிவரி பாய்.. ஆச்சரியமான பரப்பான தகவல்கள்!

0
1207
Odi wc

இந்தியாவில் நடைபெற இருக்கும் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் மொத்தம் பத்து அணிகள் பங்கு பெறுகின்றன.

இந்தப் பத்து அணிகளில் இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான், இங்கிலாந்து, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா ஆகிய எட்டு அணிகள் நேரடியாக தகுதி பெற்றன.

- Advertisement -

மீதமுள்ள இரண்டு இடங்களுக்கு சில மாதங்களுக்கு முன்பு ஜிம்பாப்வே நாட்டில் தகுதி சுற்று போட்டிகள் நடைபெற்றன. இதில் அதிர்ச்சி அளிக்கும் விதமாக வெஸ்ட் இண்டீஸ் முதல்முறையாக ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தகுதி பெறாமல் வெளியேறியது. மேலும் தொடரை நடத்திய ஜிம்பாப்வேவும் வெளியேறியது.

இறுதியில் எதிர்பார்த்தபடியே இலங்கை அணி தகுதி பெற்றது. அதே சமயத்தில் இரண்டாவது சுற்றில் மிக அபாரமான செயல்பாட்டை வெளிப்படுத்திய நெதர்லாந்து அணி ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பைக்கு கடைசி அணியாக தகுதி பெற்றது.

தற்பொழுது உலகக் கோப்பையில் விளையாட இருக்கும் 10 அணிகளும் அதற்கு முன்பாக தங்களை தயார்படுத்திக்கொள்ள ஒருநாள் கிரிக்கெட் தொடர்களில் விளையாடிக் கொண்டு வருகின்றன. ஆனால் நெதர்லாந்து அணிக்கு மட்டுமே அப்படியான எந்தப் போட்டிகளும் இல்லை.

- Advertisement -

இதன் காரணமாக நெதர்லாந்து அணி இந்திய சூழ்நிலையில் தங்களை தயார்படுத்திக் கொள்வதற்காக, சுழற் பந்துவீச்சில் சிறப்பாக செயல்படுவதற்காக, வலைப் பயிற்சிக்கு சுழற் பந்து வீசக்கூடிய வீரர்களை தேடுவதற்கு, ஆன்லைனில் விண்ணப்பங்களை விநியோகம் செய்து இருந்தது.

இந்த நிலையில் பெறப்பட்ட பத்தாயிரம் விண்ணப்பங்களில் இருந்து, நான்கு பேரை தேர்வு செய்து வெளியிட்டு இருக்கிறது. அந்த நான்கு பேரில் ஒருவர் சென்னையைச் சேர்ந்த லோகேஷ் குமார். இவர் உணவு விநியோகம் செய்யும் டெலிவரி பாயாக வேலை செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இவர் குல்தீப் யாதவ் போல இடதுகை சைனா மேன் சுழற்பந்து வீச்சாளர்.

தனக்கு வாய்ப்பு கிடைத்தது குறித்து லோகேஷ் குமார் பேசும்பொழுது “இது எனது தொழில் முறை கிரிக்கெட் வாழ்க்கையில் விலைமதிப்பற்ற தருணங்களில் ஒன்றாகும். நான் இன்னும் டிஎன்சிஏ மூன்றாம் பிரிவு லீக்கில் கூட விளையாடியது கிடையாது. நான் ஐந்தாவது பிரிவில் நான்கு வருடங்களாக விளையாடி வருகிறேன். நான்காவது பிரிவில் விளையாடுவதற்கு இந்தியன் ஆயில் அணிக்கு பதிவு செய்து வைத்திருக்கிறேன். நெதர்லாந்து அணியால் நெட் பவுலராக நான் தேர்வு செய்யப்பட்ட பின், எனது திறமை இறுதியாக அங்கீகரிக்கப்பட்டதாக உணர்கிறேன்!” என்று நெகிழ்ச்சியாக கூறி இருக்கிறார்!