ஆசியக் கோப்பை இறுதிப்போட்டியில் வென்றதும் கோப்பையை பெற்றுக் கொள்ளாத முடிவை இந்திய அணி தான் எடுத்தது என கேப்டன் சூர்யா குமார் யாதவ் கூறியிருக்கிறார்.
இந்திய அணி பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஆசியக் கோப்பை இறுதிப் போட்டியில் வெற்றி பெற்று, ஆசிய கிரிக்கெட் கவுன்சில் சேர்மேனாக இருக்கும் பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் மொஹ்சின் நக்வியிடம் இருந்து கோப்பையை பெற்றுக் கொள்ள மறுத்துவிட்டது.
சர்ச்சையான விவகாரம்
இந்த நிலையில் இது குறித்து உலக கிரிக்கெட் நாடுகள் ஒன்று கூடி இந்திய கிரிக்கெட் வாரியத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாகிஸ்தான் தரப்பிலிருந்து புகார்கள் குவிந்து கொண்டிருக்கிறது. மிகவும் மோசமான முறையில் இந்திய அணி நடந்து கொண்டதாக தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
தற்போது தாங்கள் ஒரு குறிப்பிட்ட நபரிடம் இருந்து மட்டுமே கோப்பையை பெற்றுக்கொள்ள விரும்பவில்லை எனவும், இதற்காக தாங்கள் அறைக்குள் சென்று பூட்டிக் கொள்ளவில்லை எனவும், மேலும் தாங்கள் பார்த்தபொழுது கோப்பையை தூக்கிக் கொண்டு யாரோ ஓடி விட்டார்கள் என்றும் சூரியகுமார் யாதவ் தெரிவித்திருக்கிறார்.
இது இந்திய அணியின் முடிவு
இதுகுறித்து சூரியகுமார் யாதவ் பேசும்பொழுது “நாங்கள் கதவை பூட்டிக் கொண்டு ட்ரெஸ்ஸிங் ரூமுக்குள் உட்காரவில்லை. பரிசு வழங்கும் விழாவுக்கு யாரையும் காக்க வைக்கவில்லை. அவர்கள் கோப்பையுடன் ஓடிவிட்டார்கள். நான் இதை பார்த்தேன். சிலர் வீடியோ எடுத்துக் கொண்டிருந்தார்கள். நாங்கள் எங்கும் செல்லவில்லை மைதானத்தில்தான் இருந்தோம்”
இதையும் படிங்க : இந்திய அணி சீப்பாக நடந்து கொண்டது.. உலக கிரிக்கெட் நாடுகள் உடனே ஒன்று சேர வேண்டும் – கம்ரன் அக்மல் பேட்டி
“எங்களுக்கு வெற்றி கோப்பையை யாராவது வழங்கினால் அதை நாங்கள் பெற்றுக் கொள்ளக் கூடாது என அரசாங்கம் மற்றும் இந்திய கிரிக்கெட் வாரியத்தில் இருந்து யாரும் கூறவில்லை. இந்த முடிவை அணியாக நாங்கள் எடுத்த முடிவு. பிறகு பரிசளிப்பு நிகழ்வு தாமதமாகிக் கொண்டிருந்தது. மைதானத்தில் கூச்சல் இடத் தொடங்கினார்கள். ஆசிய கிரிக்கெட் கவுன்சில் உறுப்பினர்கள் பேசுவதை நான் பார்த்தேன். என்ன பேசினார்கள் என தெரியாது. பிறகு அதிலிருந்த பிரதிநிதி ஒருவர் கோப்பையை தூக்கிக் கொண்டு ஓடி விட்டார்” என்று கூறியிருக்கிறார்.






