இந்தியா இங்கிலாந்து அணிகள் இந்தியாவில் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் மோத இருக்கின்றன. இதன் முதல் போட்டி இன்று கொல்கத்தா இடன் கார்டன் மைதானத்தில் நடைபெற இருக்கிறது.
இங்கிலாந்து அணி சாம்பியன்ஸ் டிராபியில் பங்கேற்பதற்கு முன்பாக இந்தியாவில் இந்திய அணிக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் மற்றும் 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடர் என இரண்டு தொடர்களில் விளையாட இருக்கிறது. இதில் முதலில் ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெறுகிறது.
சஞ்சு சாம்சனை சுற்றிய சர்ச்சைகள்
இந்த நிலையில் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கு அறிவிக்கப்பட்ட இந்திய அணியில் மீண்டும் சஞ்சு சாம்சன் இடம் பெற்றார். இரண்டாவது விக்கெட் கீப்பராக யாரும் எதிர்பார்க்காத வகையில் ஜிதேஷ் சர்மா நீக்கப்பட்டு துருவ் ஜுரல் கொண்டு வரப்பட்டார். இஷான் கிஷான் மீண்டும் தேர்வில் புறக்கணிக்கப்பட்டார்.
இத்துடன் கேரள கிரிக்கெட் சங்கம் மற்றும் சஞ்சு சாம்சனுக்கு இடையில் விஜய் ஹசாரே டிராபிக்கு தேர்வு செய்யப்படாதது தொடர்பாக பிரச்சனைகள் சென்று கொண்டு இருக்கிறது. கேரள கிரிக்கெட் சங்கத்தின் தலைவர் ஜார்ஜ் விரும்பிய போதெல்லாம் வந்து சஞ்சு சாம்சன் விளையாட முடியாது என்று தெரிவித்திருந்தார். இன்னொரு பக்கம் சஞ்சு சாம்சனின் தந்தை கேரள கிரிக்கெட் சங்கத்தில் சிலர் தன் மகனுக்கு எதிராக செயல்படுவதாக கூறியிருந்தார்.
சூரியகுமார் கொடுத்த நிம்மதி
இந்த நிலையில் டி20 தொடருக்கு முன்பாக பத்திரிகையாளர்களை சந்தித்த இந்திய அணியின் கேப்டன் சூரியகுமார் யாதவ் சஞ்சு சம்சன் குறித்து பேசும்பொழுது “இந்திய டி20 அணியின் விக்கெட் கீப்பர் யார் என்பது குறித்து எந்த கேள்வியும் கிடையாது. கடந்த ஏழு எட்டு போட்டிகளில் சஞ்சு சாம்சன் மிகச் சிறப்பாக விளையாடி இருக்கிறார். அவர் திறமை என்ன என்பதை அவர் வெளிப்படுத்தி இருக்கிறார். எனவே அவரே தொடர்வார்”
இதையும் படிங்க : கோலி விஷயத்தில் கருணை வேண்டாம்.. வெறும் பெயரை வைத்து இனி ஓட்ட முடியாது – கபில்தேவ் கருத்து
“சஞ்சு சாம்சன் என்ன செய்தாரோ அதைத்தான் மற்ற வீரர்களும் செய்ய வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். அவருக்கு நாங்கள் ஒரு வாய்ப்பு கொடுத்தோம். அதை அவர் அருமையாக பயன்படுத்திக் கொண்டார். அவர் முன்னேறி வந்த விதத்திற்கு நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்” என்று கூறியிருக்கிறார். கேரள கிரிக்கெட் சங்கத்தின் பிரச்சனைக்கு இடையில் இந்திய டி20 அணிக்கு நிரந்தர விக்கெட் கீப்பராக சஞ்சு சாம்சன் அறிவிக்கப்பட்டது அவரை நிம்மதி அடைய வைத்திருக்கிறது.






