நேற்று தரம்சாலாவில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணி 37 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மேலும் இந்த போட்டியில் வெற்றி பெற்றது குறித்து அந்த அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் பேசியிருக்கிறார்.
இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணி 10 போட்டியில் 13 புள்ளிகள் எடுத்து புள்ளி பட்டியலில் நான்காவது இடத்தில் இருந்தது. லக்னோ அணி 10 போட்டியில் 10 புள்ளிகள் எடுத்து புள்ளி பட்டியலில் ஆறாவது இடத்தில் இருந்தது. எனவே இரண்டு அணிகளுக்குமே ப்ளே ஆப் சுற்ற வாய்ப்பு இருந்ததால் போட்டியில் எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது.
பிரப்சிம்ரன் அதிரடி
இதைத்தொடர்ந்து டாஸ் தோற்று முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணிக்கு பிரப்சிம்ரன் சிங் 48 பந்தில் 91 ரன்கள், கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் 25 பந்தில் 45 ரன்கள் எடுத்தார்கள். அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 236 ரன்கள் குவித்தது.
இதைத் தொடர்ந்து இலக்கை நோக்கி விளையாடிய லக்னோ அணி 20 ஓவர்களில் 199 ரன்கள் மட்டுமே எடுத்தது. அந்த அணியின் ஆயுஸ் பதோனி 40 பந்தில் 74 ரன்கள் எடுத்தார். இதைத்தொடர்ந்து பஞ்சாப் அணி 37 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மேலும் புள்ளி பட்டியலில் இரண்டாவது இடத்திற்கும் முன்னேறியது. மேலும் தரம்சாலா மைதானத்தில் 12 ஆண்டுகள் கழித்து பஞ்சாப் வெற்றி பெற்று இருப்பது குறிப்பிடத்தக்கது.
எனக்கு அது தெரியாதது மகிழ்ச்சி
இந்த வெற்றி குறித்து ஸ்ரேயாஸ் ஐயர் பேசும் பொழுது “அனைவரும் சரியான நேரத்தில் அடி எடுத்து வைத்தார்கள். ஒவ்வொரு தனிப்பட்ட வீரர்களின் பங்களிப்பும் மிக அற்புதமானது. பிரப்ஸிம்ரன் இன்று பேட்டிங் செய்த விதம் கண்களுக்கு ஒரு விருந்து போல அமைந்தது. இங்கு நாங்கள் 12 வருடம் வெற்றி பெறவில்லை என்பது எனக்கு தெரியாது. இதில் நான் மகிழ்ச்சியே அடைகிறேன். போட்டியில் வெற்றி பெற வேண்டும் என நான் உள்ளே வருகிறேன். கடின உழைப்புக்கு அதிர்ஷ்டம் எப்பொழுதும் இருக்கும். எங்களுக்கு அது இருக்கிறது”
இதையும் படிங்க : எல்லா நேரமும் அவங்களையே நம்ப முடியாது.. ஆரம்பத்திலேயே இந்த தப்பை செஞ்சுட்டோம் – லக்னோ கேப்டன் ரிஷப் பண்ட்
“எங்கள் அணியில் எல்லா வீரர்களும் சரியான நேரத்திற்கு வருகிறார்கள். ஒவ்வொருவரின் பங்களிப்பும் மிகச் சிறப்பாக இருக்கிறது. நாம் சரி செய்ய வேண்டிய ஒரே விஷயம் நம்முடைய ஆட்ட விழிப்புணர்வு மற்றும் ஆட்டத்தை எடுத்துச் செல்லும் விதம். எப்பொழுதும் நாம் நம்முடைய உள்ளுணர்வை நம்ப வேண்டும். புள்ளி விபரங்களை பெரிய அளவில் எடுத்துக் கொள்ளக் கூடாது” என்று கூறி இருக்கிறார்.






