நேற்று ஐபிஎல் தொடரில் இரண்டாவது தகுதி சுற்றில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் வீரர் ஷஷான்க் சிங் அலட்சியத்திற்கு கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் தன்னுடைய கோபத்தை வெளிப்படுத்திய விதம் ரசிகர்களை ஆச்சரியப்பட வைத்திருக்கிறது.
இந்த போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி டாஸ் வென்று முதலில் பந்து வீசியது. முதலில் பேட்டிங் செய்ய வந்த மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 203 ரன்கள் எடுத்தது. 18 வருட ஐபிஎல் தொடர் வரலாற்றில் 200 ரன் மேல் எடுத்து மும்பை இந்தியன்ஸ் இதுவரையில் தோல்வி அடைந்ததில்லை என்பதால், நிச்சயம் இறுதிப்போட்டிக்கு அந்த அணி தகுதி பெற போகிறது என்று எல்லோரும் எதிர்பார்த்தார்கள்.
வெற்றிக்கான பார்ட்னர்ஷிப்
பஞ்சாப் கிங்ஸ் அணி 70 ரன்கள் தாண்டி தனது மூன்றாவது விக்கெட்டை இழந்துவிட்டது. எனவே அந்த நேரத்தில் அந்த அணி தோல்வி அடைவதற்கான அதிகபட்ச வாய்ப்புகள் இருந்தன. இப்படியான நேரத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு அடுத்த விக்கெட்டுக்கு நல்ல பார்ட்னர்ஷிப் கட்டாய தேவையாக இருந்தது.
இந்த நிலையில் ஸ்ரேயாஸ் ஐயருடன் இணைந்த நெகேல் வதேரா 48 ரன்கள் எடுத்தது மட்டும் இல்லாமல், 47 பந்தில் 84 ரன்கள் பார்ட்னர்ஷிப் வருவதற்கும் முக்கிய காரணமாக இருந்தார். இந்த நிலையில் துரதிஷ்டவசமாக அஸ்வினி குமார் ஓவரில் ஆட்டம் இழந்தார்.
ஸ்ரேயாஸ் ஐயரின் கோபம்
இதற்கு அடுத்து உள்ளே வந்த ஷஷான்க் சிங் அடுத்த ஓவரில் ஹர்திக் பாண்டியா கையில் பந்தை நேராக அடித்து விட்டு அலட்சியமாக மெதுவாக ஓடி ரன் அவுட் ஆகி அதிர்ச்சி கொடுத்தார். அந்த நேரத்தில் பஞ்சாப் கிங்ஸ் ஐந்து விக்கெட்டுகளை இழந்து 20 பந்துகளில் வெற்றிக்கு 31 ரன்கள் எடுக்க வேண்டியதாக இருந்தது. களத்தில் கோபத்தையோ அழுத்தத்தையோ காட்டிக் கொள்ளாத ஸ்ரேயாஸ் ஐயர் போட்டியை நின்று 19 ஆவது ஓவரில் முடித்து விட்டார்.
இதையும் படிங்க : ஹர்திக் பாண்டியா செஞ்ச மெகா தப்பு.. போட்டி மாறிய தருணம்.. பொளக்கும் ரசிகர்கள்.. என்ன நடந்தது?
இதைத் தொடர்ந்து வீரர்கள் கைகுலுக்கும் சம்பிரதாய நிகழ்வு நடைபெற்றது. அப்போது ஷஷான்க் சிங் கைகுலுக்க ஸ்ரேயாஸ் ஐயரிடம் வந்தார். அப்பொழுது ஸ்ரேயாஸ் ஐயர் நடு மைதானத்திலேயே அவர் ஆட்டம் இழந்த அலட்சியமான முறைக்கு தனது கோபத்தை வெளிப்படுத்தினார். மேலும் ஹிந்தியில் ஒரு கெட்ட வார்த்தையையும் கூறினார். இது அப்பட்டமாக வீடியோவில் பதிவாகி இருக்கிறது. ஸ்ரேயாஸ் ஐயர் பொதுவாக உணர்ச்சிகளை வெளிப்படுத்தாமல் இருக்கக்கூடியவர். ஷஷான்க் சிங் ரன் அவுட் ஆனபோதும் அமைதியாகவே இருந்தார். ஆனால் போட்டி முடிந்ததும் தனது கோபத்தை காட்டி விட்டார். இது ரசிகர்களை ஆச்சரியப்பட வைத்திருக்கிறது!






