இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான சாம்பியன்ஸ் டிராபி கடைசி லீக் போட்டியில் இந்திய அணி 44 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
இந்த சூழ்நிலையில் இந்திய அணி வெற்றி பெற்ற விதம் குறித்து அணியின் கேப்டன் ரோஹித் சர்மா சில முக்கியமான விஷயங்கள் பேசியிருக்கிறார்.
இந்திய அணி வெற்றி
இந்த போட்டியில் முதலில் விளையாடிய இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 249 ரன்கள் குவித்தது. இதில் அதிகபட்சமாக ஸ்ரேயாஸ் அய்யர் 98 பந்துகள் எதிர்கொண்டு 4 பவுண்டரி மற்றும் 2 சிக்சர் என 79 ரன்கள் குவித்தார். அவருக்கு அடுத்தபடியாக ஹர்திக் பாண்டியா 45 ரன்கள் மற்றும் அக்சார் பட்டேல் 42 ரன்கள் குவித்தார்.
அதற்குப் பின்னர் வெற்றி இலக்கை நோக்கி நியூசிலாந்து அணி களம் இறங்கியது. நியூசிலாந்து அணியின் மூன்றாவது வரிசை வீரர் வில்லியம்சன் ஒரு முனையில் போராட, மறுமுனையில் பேட்ஸ்மேன்கள் தொடர்ந்து விரைவாக ஆட்டம் இழந்து வெளியேறினார்கள். இறுதியில் இந்திய அணி 205 ரன்களுக்குள் நியூசிலாந்து அணியை வீழ்த்தி 44 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தனது முதல் அரை இறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணியை எதிர்கொள்ள உள்ளது. இந்த சூழ்நிலையில் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா இந்த வெற்றி குறித்து சில முக்கிய கருத்துக்களை கூறியிருக்கிறார்.
எங்கள் திட்டம் இதுதான்
இதுகுறித்து அவர் விரிவாக கூறும்போது “நாங்கள் இந்தத் தொடரில் உச்சத்தில் முடிப்பது மிகவும் முக்கியம். நியூசிலாந்து அணி சமீப காலமாக சிறப்பான ஆட்டத்தை விளையாடி வருகிறது. முதல் பவர் பிளேவில் விக்கட்டை இழந்த பிறகு ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் அக்சார் பட்டேல் கூட்டணி மிகவும் முக்கியமானதாக அமைந்தது. அவர்கள் எங்களை நல்ல ஸ்கோரை எட்ட வைத்தனர். மேலும் எங்களது நல்ல பந்துவீச்சால் எங்களது இலக்கை காப்பாற்ற முடியும் என்கிற நம்பிக்கை இருந்தது. வருண் வித்தியாசமான அணுகு முறையை கொண்டிருக்கிறார். மேலும் அவருக்கு எப்படி செயல்பட வேண்டும் என்கிற திட்டம் தெளிவாக இருக்கிறது.
இதையும் படிங்க:வருணின் சுழலில் சிக்கிய நியூசி அணி.. வில்லியம்சன் போராட்டம் வீண்.. ஆஸியை எதிர்கொள்ள தயாராகும் இந்தியா.. CT 2025
அடுத்த ஆட்டத்தில் நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்பது ஒரு நல்ல தலைவலியாக இருக்கிறது. இவ்வளவு குறுகிய ஆட்டத்தில் வேகம் முக்கியமானது. முயற்சி செய்து எல்லாவற்றையும் சரியாக செய்து வெற்றி பெற வேண்டும். தவறுகள் நடந்தாலும் அதனை சரி செய்வது முக்கியம். இது ஒரு நல்ல ஆட்டமாக இருக்கும் ஆஸ்திரேலியா அணி ஐசிசி தொடரில் சிறப்பாக விளையாடிய வரலாற்றை கொண்டுள்ளது. ஐசிசி தொடர்களில் விஷயங்களை சரியாக செய்ய அந்த நாளில் நாம் என்ன செய்ய வேண்டும் என்பதில் கவனம் செலுத்த வேண்டும். அவற்றை நாங்கள் எதிர்நோக்குகிறோம் எங்களால் சிறப்பாக செயல்பட முடியும் என்கிற நம்பிக்கை உள்ளது” என்று ரோகித் சர்மா கூறியிருக்கிறார்.






