நேற்று பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியையும் வென்று, மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரை ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி முழுமையாகக் கைப்பற்றியது.
நேற்றைய போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா மிகச் சிறப்பாக விளையாடி 69 பந்துகளில் 121 ரன்கள் குவித்து வெற்றிக்கு மிக முக்கிய காரணமாக விளங்கினார்.
இவருடன் இணைந்து விளையாடிய இளம் வீரர் ரிங்கு சிங் 39 பந்துகளில் 69 ரன்கள் அடித்தார். இந்த ஜோடி நேற்று ஆட்டம் இழக்காமல் 190 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது. இந்திய டி20 கிரிக்கெட் வரலாற்றில் மிக அதிகபட்ச பார்ட்னர்ஷிப்பாக இது அமைந்தது.
மேற்கொண்டு இந்திய அணி டி20 உலக கோப்பை வரையில் எந்த டி20 சர்வதேச தொடரிலும் விளையாடப் போவதில்லை. நேற்றைய போட்டியே இந்திய அணிக்கு கடைசி சர்வதேச டி20 போட்டியாக அமைந்திருக்கிறது.
போட்டி முடிவுக்குப் பின் டி20 உலகக் கோப்பை இந்திய அணி தேர்வு குறித்து பேசிய ரோஹித் சர்மா ” நாங்கள் இன்னும் 15 பேர் இறுதி அணியை தேர்வு செய்யவில்லை. ஆனால் எங்கள் மனதில் 8 முதல் 10 வீரர்கள் இருக்கிறார்கள். எனவே நாங்கள் கண்டிஷனுக்கு ஏற்ப அணியைத் தேர்வு செய்வோம்.
வெஸ்ட் இண்டீசில் ஆடுகளங்கள் மெதுவாக இருக்கின்றன. இதற்கு ஏற்றபடி நாங்கள் எங்களது அணியை தேர்வு செய்ய வேண்டும். நானும் ராகுல் டிராவிட்டை பொருத்தவரையில் இருவரும் தெளிவை எப்பொழுதும் வைத்திருக்க விரும்புகிறோம். அதாவது ஒரு வீரர் தேர்வு செய்யப்பட்டாலும், தேர்வு செய்யப்படாவிட்டாலும் அது குறித்து அந்த வீரருக்கு காரணங்கள் தெரிவிக்கப்பட வேண்டும். நாங்கள் வீரர்களிடம் அதைக் கூற முயற்சிக்கிறோம்.
உலகக் கோப்பை தேர்வில் எல்லோரையும் நம்மால் மகிழ்ச்சியாக வைத்திருக்க முடியாது. நான் கேப்டனாக இருந்த காலத்தில் இதைத்தான் கற்றுக் கொண்டேன். 15 வீரர்களை மகிழ்ச்சியாக வைத்திருக்கலாம். பிறகு அதிலும் 11 வீரர்கள் மட்டும் மகிழ்ச்சியாக இருப்பார்கள். பெஞ்சில் அமர வைக்கப்பட்ட நான்கு வீரர்கள் தாங்கள் ஏன் விளையாடவில்லை என்று மகிழ்ச்சி அடைய மாட்டார்கள்.
நீங்கள் இந்த விஷயத்தில் அனைவரையும் மகிழ்ச்சியாக வைத்திருக்க முடியாது. இதற்கு பதில் நாம் எப்பொழுதும் அணியின் டார்கெட்டில்தான் கவனத்தை வைத்திருக்க வேண்டும்” என்று கூறி இருக்கிறார்.