அடுத்த ஐபிஎல் தொடருக்கு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி தக்கவைத்துக் கொள்ளப் போகும் மூன்று வீரர்கள் இவர்களே – பிரைன் லாரா கணிப்பு

0
145
Brain Lara and Virat Kohli

நேற்று இரவு நடந்த முடிந்த எலிமினேட்டர் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. போட்டியின் முடிவில் கொல்கத்தா அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூரு அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. இந்த போட்டியில் தோல்வி அடைந்த காரணத்தினால் நடப்பு தொடரில் இருந்து பெங்களூரு அணி வெளியேறியுள்ளது.

நேற்று போட்டி முடிந்ததும் விராட் கோலி பெங்களூர் ரசிகர்களுக்கு ஒரு நம்பிக்கையான செய்தியைக் கூறினார். பெங்களூரு அணியை தவிர்த்து வேறு எந்த அணியையும் என்னால் கனவில் கூட நினைத்து பார்க்க முடியாது. இனி வரும் ஐபிஎல் தொடர்களில் கேப்டனாக விளையாடாவிட்டாலும் நான் நிச்சயமாக ஒரு வீரராக தொடர்ந்து விளையாடிக் கொண்டே இருப்பேன் என்று கூறினார்.

- Advertisement -

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி நிர்வாகமும் நிச்சயமாக விராட் கோலியை வேறு எந்த அணிக்கும் விட்டுக் கொடுக்காது என்று உறுதியாக நம்பலாம். அடுத்த வருடம் மெகா ஏலம் நடைபெறவுள்ள நிலையில், தற்பொழுது உள்ள அணிகள் தங்களது அணியில் இருந்து மூன்று வீரர்களை மட்டுமே தக்க வைத்துக் கொள்ள முடியும். மற்ற வீரர்கள் ஏலத்தில் புதிதாக களமிறக்க படுவார்கள்.

இதனடிப்படையில் ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணி எந்த 3 வீரர்களை மீண்டும் தக்கவைத்துக் கொள்ளப் போகிறது என்கிற கேள்வி அனைத்து ரசிகர்களுக்கும் நிச்சயமாக இருக்கும். அந்தக் கேள்விக்கு பதிலளிக்கும் வகையில் முன்னாள் லெஜெண்ட் கிரிக்கெட் வீரர் பிரையன் லாரா தனது கணிப்பை கூறியுள்ளார்.

இந்த மூன்று வீரர்களை தான் பெங்களூரு நிர்வாகம் தக்க வைக்கும்

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி நிர்வாகம் தக்கவைத்துக் கொள்ளப் போகும் அந்த மூன்று வீரர்கள் விராட் கோலி, கிளென் மேக்ஸ்வெல் மற்றும் படிக்கல் என்று பிரைன் லாரா கூறியுள்ளார். ஐபிஎல் தொடர் ஆரம்பித்த வருடம் முதல் இன்றுவரை பெங்களூர் அணிக்காக ஒரு ராஜ விசுவாசியாக விராட் கோலி விளையாடி வருவது நம் அனைவருக்கும் தெரியும். ஐபிஎல் தொடரில் அதிக ரன்கள் குவித்த வீரரும் அவரே. எனவே நிச்சயமாக அவரை அந்த அணி கைவிடும் யோசனையை கனவில்கூட நினைத்துப் பார்க்காது.

- Advertisement -

அடுத்தபடியாக கிளென் மேக்ஸ்வெல் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த அதிரடி வீரர். கடந்த ஆண்டு பஞ்சாப் அணிக்காக சுமாராக விளையாடிய அவர் இந்த ஆண்டு பெங்களூர் அணிக்காக 15 போட்டிகளில் 513 ரன்கள் குவித்துள்ளார். இதில் கவனிக்கப்பட வேண்டிய விஷயம் பெங்களூர் அணியில் அதிக ரன்கள் குவித்த வீரர் இவர்தான். பெங்களூரு அணியில் சிறப்பாக விளையாடிக் கொண்டிருக்கும் இவரை நிச்சயமாக அடுத்த ஆண்டு பெங்களூர் அணி தக்க வைக்க நிறைய வாய்ப்பு உள்ளது.

மூன்றாவது வீரராக உள்ள இளம் வீரர் படிக்கல் பெங்களூர் அணிக்காக கடந்த சில ஆண்டுகளில் மிகச்சிறப்பாக விளையாடி வருகிறார். இந்த ஆண்டு பெங்களூர் அணியில் மேக்ஸ்வெல்லுக்கு அடுத்தபடியாக அதிக ரன்கள் குவித்த வீரர் படிக்கல் தான். அதுமட்டுமின்றி தொடர்ச்சியாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தக்கூடிய திறமை இவரிடம் உள்ள காரணத்தினால் பெங்களூரு அணி இவரை தக்க வைக்கும் முடிவை எடுக்கும் என்று நாம் எதிர்பார்க்கலாம்.