இந்திய அணி இரு அணிகளாகப் பிரிந்து ஒரு அணி இங்கிலாந்திற்கு ஒரு டெஸ்ட், மூன்று டி20, மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட, மூன்று வடிவிலான தொடரில் பங்கேற்க சென்றுள்ளது. இந்த அணிக்கு ரோகித் ஷர்மா கேப்டனாகவும், ராகுல் டிராவிட் தலைமைப் பயிற்சியாளராகவும் செயல்படுகிறார்கள்.
இன்னொரு இந்திய அணி இரண்டு டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட இங்கிலாந்திற்கு அருகிலிலுள்ள அயர்லாந்து நாட்டிற்குச் சென்றுள்ளது. இந்த அணிக்கு ஹர்திக் பாண்ட்யா கேப்டனாகவும், லட்சுமணன் தலைமைப் பயிற்சியாளராகவும் செயல்படுகிறார்கள்.
இன்று ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான இந்திய அயர்லாந்து அணியுடன் முதல் டி20 போட்டியில் இரவு 9 மணிக்கு விளையாடுவதாய் இருந்தது. ஆனால் டாஸில் ஹர்திக் பாண்ட்யா வென்று பீல்டிங்கை தேர்வு செய்ததும் மழை குறுக்கிட்டது. இதனால் இறுதியாக 11.20 மணிக்கு 12 ஓவர்கள் கொண்ட போட்டியாக, இரண்டு பவுலர்கள் அதிகபட்சமாக மூன்று ஓவர்கள் வீசலாமென்ற அறிவிப்போடு போட்டி தொடங்கியது.
இந்தப் போட்டியில் இளம் இந்திய வேகப்பந்து வீச்சாளர் உம்ரான் மாலிக் வாய்ப்பு பெற்றிருக்க போட்டி துவங்கியது. முதல் ஓவரை புவனேஷ்வர் குமார் வீசினார். அந்த ஓவரின் நான்காவது பந்தை சிறப்பான இன்-ஸ்ஸ்விங்காக புவனேஷ்வர் குமார் வீச, அந்தப் பந்து அயர்லாந்து கேப்டன் பால்போர்னியை ஏமாற்றி ஸ்டம்ப்பை தட்டியது.
இதன் மூலம் புவனேஷ்வர் குமார் சர்வதேச டி20 போட்டிகளில் பவர்-ப்ளேவில் அதிக விக்கெட்டுகள் எடுத்த பவுலர் என்ற சாதனையைப் படைத்தார்.
புவனேஷ்வர் குமார்- 34 விக்கெட்டுகள்
சாமுவேல் பத்ரி – 33 விக்கெட்டுகள்
டிம் சவுதி – 33 விக்கெட்டுகள்
ஷகிப் அல் ஹசன் – 27 விக்கெட்டுகள்