இந்தியாவில் நடைபெறும் உள்நாட்டு கிரிக்கெட் தொடரான துலீப் டிராபி தொடரில் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா தவிர்த்து இந்திய சர்வதேச அணியில் விளையாடும் பல முன்னணி வீரர்கள் பங்கேற்று இருக்கின்றனர்.
இந்த சூழ்நிலையில் விராட் கோலி ரோஹித் சர்மா மற்றும் பும்ரா ஆகியோர் பங்கு பெறாததற்கு உரிய காரணத்தை பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா தெரிவித்து இருக்கிறார்.
இந்தியாவில் நடைபெறும் புகழ்பெற்ற கிரிக்கெட் தொடர்களில் ஒன்றான துலீப் டிராபி தொடர் வருகிற செப்டம்பர் 5ஆம் தேதி முதல் நடைபெற இருக்கிறது. மொத்தம் இந்தத் தொடரில் நான்கு அணிகள் பங்கேற்கின்றன. இதில் டீம் ஏ பிரிவில் சுப்மான் கில் கேப்டனாகவும், டீம் பி பிரிவில் ஈஸ்வரன் கேப்டன் ஆகவும், டீம் சி பிரிவில் ருதுராஜ் கேப்டனாகவும், டீம் டீ பிரிவில் ஸ்ரேயாஸ் ஐயர் கேப்டன் ஆகவும் செயல்படுகின்றனர்.
மேலும் இந்தத் தொடரில் சர்வதேச அணியில் பங்குபெறும் 90 சதவீத வீரர்கள் இதில் இடம் பெறுகின்றனர். சிவம் டுபே, ரவீந்திர ஜடேஜா, ரியான் பராக், சூரியகுமார் யாதவ் உள்ளிட்ட சர்வதேச வீரர்கள் அனைவரும் பங்குபெறும் சூழ்நிலையில் இந்திய அணியின் மூத்த வீரர்களான விராட் கோலி, ரோஹித் சர்மா, பும்ரா மற்றும் ரவிச்சந்திரன் அஸ்வின் ஆகியோர் இந்த தொடரில் கலந்து கொள்ளவில்லை. இவர்கள் நான்கு பேருக்கு மட்டும் விலக்கு அளிக்கப்பட்டது ஏன் என்று சமூக வலைதளங்களில் கேள்வி எழுந்த நிலையில் பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா சமீபத்தில் அளித்த பேட்டியில் அதற்கான விளக்கத்தை கூறியிருக்கிறார்.
ஜெய்ஷா இது குறித்து விரிவாக கூறும்போது “அந்த வீரர்களைத் தவிர மற்ற அனைவரும் விளையாடுகிறார்கள். அதை நீங்கள் பாராட்ட வேண்டும். புச்சி பாபு தொடரில் ஸ்ரேயாஸ் அய்யர் இஷாந்த் கிஷான் உள்ளிட்ட வீரர்கள் விளையாடுகிறார்கள் என்பதை நீங்கள் கவனத்தில் கொள்ள வேண்டும். ரோகித் சர்மா, விராட் கோலி போன்ற முன்னணி வீரர்களை துலீப் ட்ராபி தொடரில் விளையாட வேண்டும் என்று வலியுறுத்தக் கூடாது.
இதனால் அவர்களுக்கு காயங்கள் ஏற்படும் அபாயமும் இருக்கிறது என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும். ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து போன்ற நாடுகளில் அனைத்து சர்வதேச வீரர்களும் இது போன்ற தொடர்களில் விளையாடுவதில்லை. எனவே வீரர்களை மரியாதையோடு நடத்த வேண்டியது மிகவும் அவசியம்” என்று கூறியிருக்கிறார்.
இதையும் படிங்க:பாபர் நல்லா ஆடறத ஐசிசி விரும்பல போல.. எந்த அடிப்படையில் ரேங்க் போடறிங்க – பசித் அலி பேச்சு
இஷான் கிசான் மத்திய ஒப்பந்தப் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட பிறகு தற்போது துலீப் டிராபி தொடரில் பங்கேற்க இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதன் மூலமாக இந்திய அணியிலும் விரைவில் இடம் பிடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்திய அணியின் இளம் வீரர்கள் இந்த தொடருக்கு கேப்டன்களாக செயல்படுவதால் அடுத்து எதிர்கால இந்திய அணியின் கேப்டனாக உருவாகும் வாய்ப்பு இந்த தொடர் மூலம் வெளிப்படும் என்று கருதப்படுகிறது.






