ஆசியன் கேம்க்கு பச்சை கொடி காட்டிய பிசிசிஐ.. 2014 ல யார் தங்கம் ஜெயிச்சாங்க?

0
625
Asiacup2023

டி20 கிரிக்கெட் வடிவம் அறிமுகமான பிறகு உலகின் மிக முக்கியமான அணிகளுக்கு மிகப்பெரிய அளவில் பணிச்சுமை இருந்து வருகிறது. முக்கியமான அணிகள் நிறைய போட்டிகளில் பங்கு பெறுகின்றன. இதன் காரணத்தால் அவர்களின் அட்டவணை மிகவும் இறுக்கமாக இருக்கிறது.

இந்த காரணத்தினால் இங்கிலாந்து ஒவ்வொரு கிரிக்கெட் வடிவத்திற்கும் தனித்தனி அணிகளை உருவாக்கும் முயற்சியில் குறிப்பிடத்தக்க வெற்றியை தற்பொழுது பெற்றுள்ளது. அவர்களின் ஒரு அணி டெஸ்ட் கிரிக்கெட் விளையாடும் பொழுது, இன்னொரு அணி வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் வேறு ஒரு நாட்டுடன் விளையாடக்கூடிய அளவில் இருக்கிறது.

- Advertisement -

உலக கிரிக்கெட்டில் முக்கிய அணிகளில் ஒன்றாக இருக்கும் இந்தியாவும், இங்கிலாந்தின் இந்த முறையை 2021 ஆம் ஆண்டு பின்பற்றி, ஒரு அணியை டெஸ்ட் கிரிக்கெட் விளையாட இங்கிலாந்துக்கும் இன்னொரு அணியை வெள்ளை பந்து கிரிக்கெட் விளையாட இலங்கைக்கும் அனுப்பியது. இதேபோல் கடந்த ஆண்டில் இங்கிலாந்துக்கு ஒரு டெஸ்ட் அணியையும் அயர்லாந்துக்கு ஒரு டி20 அணியையும் அனுப்பியது.

தற்பொழுது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் சீனாவில் செப்டம்பர் மாதத்தில் இறுதியில் தொடங்கி அக்டோபர் மாதத்தில் நடைபெற இருக்கிறது. இதில் டி20 வடிவத்தில் கிரிக்கெட் போட்டியும் ஒரு விளையாட்டாக சேர்க்கப்பட்டு உள்ளது.

கடந்த முறை தென்கொரியாவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டு போட்டியில் இந்தியா தமது கிரிக்கெட் அணிகளை களம் இறக்கவில்லை. ஆனால் இந்த முறை ஆண் மற்றும் பெண் என இரண்டு அணிகளையும் ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியா களம் இறங்குகிறது.

- Advertisement -

நேற்று மும்பையில் நடைபெற்ற இந்திய கிரிக்கெட் வாரியத்தின் அபெக்ஸ் குழுவில் செப்டம்பர் 28ஆம் தேதி பங்கேற்க இருக்கும் ஆண்கள் கிரிக்கெட் அணிக்கும், செப்டம்பர் 19 இல் பங்கேற்க இருக்கும் பெண்கள் கிரிக்கெட் அணிக்கும் முழு அனுமதி அளிப்பது என முடிவு செய்யப்பட்டது.

இதே நேரத்தில் இந்தியாவில் ஆண்கள் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் நடைபெற இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த காரணத்தினால் இரண்டாவது நிலை அணியாக ஒரு அணியை தயார் செய்து இந்திய கிரிக்கெட் வாரியம் அனுப்பும்.

இந்த அணிக்கு சிகர் தவானை கேப்டனாகவும், விவிஎஸ் லக்ஷ்மணனை பயிற்சியாளராகவும் நியமிப்பதற்கு பேச்சு வார்த்தைகள் சென்று கொண்டிருக்கிறது. மேலும் இந்த அணியில் ரிங்கு சிங் மாதிரியான பல இளம் வீரர்கள் இடம் பெறுவதற்கான வாய்ப்புகள் உண்டு.

கடந்த முறை தென்கொரியாவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டியில் இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் இறுதிப் போட்டியில் மோதின. இதில் இலங்கை அணி வென்று தங்கத்தை கைப்பற்றியது. இறுதிப் போட்டியில் தோற்ற ஆப்கானிஸ்தான் அணிக்கு வெள்ளி பதக்கம் கிடைத்தது. மூன்றாவது இடத்திற்கான வெண்கல பதக்கத்திற்கான போட்டியில் பங்களாதேஷ் ஹாங்காங் அணியை வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது.