இந்தியாவில் நடைபெறும் புகழ்பெற்ற பிரான்சிஸ் கிரிக்கெட் தொடரான இந்தியன் பிரீமியர் லீக் அடுத்த வருடம் மார்ச் மாத இறுதியில் நடைபெற உள்ளது.
அடுத்த வருடம் மெகா ஏலம் நடைபெற இருப்பதால் வீரர்கள் தக்க வைப்பது குறித்து ஐபிஎல் அணிகளுக்குள்ளாக குழப்பங்கள் நீடித்து வருவதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
ஐபிஎல் கிரிக்கெட்டில் குறிப்பிட்ட ஆண்டுகளுக்கு ஒருமுறை மெகா ஏலம் நடைபெறும். இதில் ஒரு அணி தங்களுக்கு விருப்பமான வீரர்களை தக்க வைத்துக் கொள்ளும். பழைய விதியின்படி இரண்டு பேருக்கு மேல் வெளிநாட்டு வீரர்கள் இருக்கக் கூடாது, மூன்று இந்தியர்களுக்கு மேல் இருக்கக்கூடாது என்பதுதான் நிபந்தனை.
மேலும் ஏலத்தின் போது ஆர்டிஎம் என்ற முறையை பயன்படுத்தி தங்கள் விருப்ப வீரரை தேர்வு செய்து கொள்ளலாம். இந்த சூழ்நிலையில் 2025ஆம் ஆண்டு நடைபெறும் ஐபிஎல்க்கு முன்பாக மெகா ஏலம் நடைபெறுவதால், பிசிசிஐ இந்த மாத இறுதியில் அனைத்து ஐபிஎல் அணிகளோடும் கலந்து ஆலோசித்து எத்தனை வீரர்கள் தக்க வைப்பது குறித்து இறுதி முடிவை எடுக்கும்.
இந்த சூழ்நிலையில் தற்போது வெளிவந்துள்ள தகவலின் படி பெரும்பாலான உரிமையாளர்கள் ஐந்து முதல் ஏழு வீரர்களை தக்க வைக்க அனுமதி அளிக்க வேண்டும் என்று இந்திய கிரிக்கெட் வாரியத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர். சில அணிகள் எட்டு வீரர்களை தேர்வு செய்து கொள்ள அனுமதி வேண்டும் எனவும் கூறியுள்ளன. இதற்கு நேர்மாறாக சில அணிகள் எந்த வீரையும் தக்க வைக்க வேண்டாம் எனவும் புதிதாக ஏலத்தில் எடுக்க அனுமதி வழங்குமாறு கோரிக்கை விடுத்துள்ளது. மேலும் சில அணிகள் தக்க வைப்பு வேண்டாம், ஆர்டிஎம் முறையில் மட்டும் வீரர்களை எடுத்துக் கொள்ள அனுமதி அளிக்க வேண்டும் எனவும் கூறியிருக்கிறது.
இதனால் ஐபிஎல் அணிகளுக்கு உள்ளாகவே தற்போது சிறு குழப்பங்கள் நீடித்து வரும் நிலையில் இதற்கான இறுதி முடிவை இந்த மாத இறுதியில் பிசிசிஐ முடிவு செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் இறுதி முடிவை எடுத்த பின்னர் ஐபிஎல் மெகா ஏலம் இந்த வருட இறுதியில் டிசம்பர் அல்லது அடுத்த வருட ஜனவரி மாதத்திலோ நடைபெறும் என்று தகவல்கள் கூறுகின்றன.
இதையும் படிங்க:கோலியை ஆட்டநாயகனா இருக்கலாம்.. ஆனா அந்த பேட்ஸ்மேன்தான் வெற்றிக்கு காரணம் – வாசிம் ஜாபர் சுட்டிக்காட்டல்
ஐபிஎல் தொடரை பொருத்தவரை முன்னணி அணிகளான சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் ஆகிய அணிகள் ஐந்து முறை சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளன. அதற்கு அடுத்ததாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மூன்று முறை ஐபிஎல் கோப்பையை கைப்பற்றியுள்ளது. இதனால் இது போன்ற முன்னணி அணிகள் தங்களுக்கு விருப்பமான வீரர்கள் என்று மூன்று முதல் நான்கு வீரர்களை தக்க வைக்க முயற்சி செய்யும். இதன் இறுதி முடிவு இந்த மாத இறுதியில் வெளியாகும்.