பிசிசிஐ போட்ட ஆர்டர்.. இந்தியா-ஆஸ்திரேலியா டெஸ்ட்டுக்கு பிட்ச் இப்படித்தான் இருக்கவேண்டுமாம்! – சிக்கல் இந்தியாவுக்கா? ஆஸ்திரேலியாவுக்கா?

0
823

இந்தியா-ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடரில் பிட்ச் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று பராமரிப்பாளர்களுக்கு பிசிசிஐ உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடர் வருகிற பிப்ரவரி ஒன்பதாம் தேதி துவங்குகிறது. இதற்கு இப்போது இருந்தே ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு கூடியிருக்கிறது.

- Advertisement -

நான்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட இந்த தொடரின் முதல் டெஸ்ட் போட்டி நாக்பூர் மைதானத்தில் வருகிற பிப்ரவரி 9 முதல் 13ஆம் தேதி வரை நடக்க உள்ளது. இரண்டாவது டெஸ்ட் போட்டி டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி கிரிக்கெட் மைதானத்தில் 17ம் தேதி முதல் 21ம் தேதி வரை நடக்கவிருக்கிறது.

அடுத்ததாக மூன்றாவது டெஸ்ட் போட்டி தரம்சாலா மைதானத்தில் மார்ச் 1 முதல் 5ம் தேதி வரையும், நான்காவது டெஸ்ட் போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் மார்ச் 9 முதல் 13ம் தேதி வரையும் நடக்க உள்ளது.

கடைசி மூன்று முறை பார்டர் கவாஸ்கர் தொடரில் தோல்வியை சந்தித்திருக்கும் ஆஸ்திரேலியா அணி இம்முறை கட்டாயம் வெற்றிபெற வேண்டும் என்கிற முனைப்பிலும், இந்திய அணி வெற்றிபெற்று டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்குள் நுழைய வேண்டும் என்கிற முனைப்பிலும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

- Advertisement -

இந்திய துணைக்கண்டம் மைதானம் சுழல்பந்து வீச்சிற்கு அதிக அளவில் சாதகமாக இருக்கும் என்பதால், அதற்கேற்றார் போல ஆஸ்திரேலியா அணி பேட்ஸ்மேன் ஸ்பின்னர்களை வைத்து பயிற்சி செய்து வருகின்றனர்.

குறிப்பாக தற்போது பெங்களூரு அருகே உள்ள மைதானத்தில் பயிற்சி செய்து வரும் ஆஸ்திரேலியா அணி சில சுழல்பந்துவீச்சாளர்களை வலைபயிற்சி பவுலர்களாக எடுத்து அதற்கேற்றவாறு பிரத்தியேகமாக பயிற்சி செய்து வருகின்றனர். அதிலும் குறிப்பாக ரவிச்சந்திரன் அஸ்வின் போன்றே அச்சுஅசலாக பந்துவீசும் ஒருவரும் இருப்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையில் கடந்த சனிக்கிழமை அன்று பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் போட்டி நடக்கும் 4 மைதானங்களின் மேற்பார்வையாளர் மற்றும் பராமரிப்பாளர்களை பிசிசிஐ அழைத்து இந்த டெஸ்ட் தொடரில் சிறந்த டெஸ்ட் விக்கெட் இருக்கும்படி மைதானத்தை தயார் செய்ய வேண்டும் என்றும், போட்டி முழுமையாக ஐந்து நாட்கள் நடக்கும் படி அந்த பிட்ச் இருக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டதாக தகவல்கள் வந்திருக்கிறது. இதை டைம்ஸ் ஆப் இந்தியா பத்திரிக்கைக்கு பிசிசிஐ அதிகாரி ஒருவர் தெரிவித்ததாகவும் தகவல் கூறப்படுகிறது.