நடப்பு ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் இன்னும் சில மணி நேரத்தில் தொடங்கவுள்ளது. கொல்கத்தா மைதானத்தில் நடக்கவுள்ள ஆட்டத்தில் ஆர்சிபி அணியை எதிர்த்து நடப்பு சாம்பியனான கேகேஆர் அணி விளையாடுகிறது. 18வது சீசனின் முதல் ஆட்டம் என்பதால் கிரிக்கெட் ரசிகர்கள் பலரும் இந்த போட்டியை எதிர்பார்த்து இருக்கிறார்கள்.
இந்த சூழலில் ஐபிஎல் தொடர் தொடங்குவதற்கு சில மணி நேரங்கள் மட்டும் உள்ள நிலையில், பிசிசிஐ முக்கியமான விதி ஒன்றை வெளியிட்டுள்ளது. அதுவும் சூப்பர் ஓவர் நிலை வந்தால், என்ன விதிகள் பின்பற்றப்பட வேண்டும் என்று ஐபிஎல் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது ஒரு ஆட்டம் சமனில் முடிந்தால், வெற்றியாளரை தீர்மானிக்க சூப்பர் ஓவர் முறை கடைபிடிக்கப்படும்.
இதுவரை ஐபிஎல் வரலாற்றில் ஏராளமான முறை சூப்பர் ஓவர் வரை ஆட்டம் சென்றுள்ளது. 2019ம் ஆண்டு பஞ்சாப் – மும்பை இடையிலான ஆட்டத்தில் 2 சூப்பர் ஓவர் வரை ஆட்டம் நடைபெற்றது. பிசிசிஐ தரப்பில் வெளியிடப்பட்டுள்ள சூப்பர் ஓவர் விதிகளில், ஆட்டம் சமனில் முடிந்த 10 நிமிடங்களில் சூப்பர் ஓவர் வீச தொடங்கி இருக்க வேண்டும்.
அதேபோல் 10 நிமிடங்களுக்குள் சூப்பர் ஓவர் வீசப்பட்டு முடிந்திருக்க வேண்டும். சூப்பர் ஓவருக்கு என்று புதிய பிட்ச்கள் அளிக்கப்படாது. எந்த பிட்சில் ஆட்டம் நடந்ததோ, அதெ பிட்சில் சூப்பர் ஓவர் நடத்தப்படும். ஆட்டத்தில் தேர்வு செய்யப்பட்ட பிளேயிங் 12 வீரர்கள் மட்டுமே சூப்பர் ஓவரில் விளையாட முடியும். தலையில் காயமடைந்த பின் மாற்று வீரர்கள் சூப்பர் ஓவரில் களமிறங்க கூடாது.
அதேபோல் தாமதமாக பவுலிங் செய்து பெனால்டி டைம் அளிக்கப்பட்டால், அந்த தண்டனை சூப்பர் ஓவரிலும் பின்பற்றப்படும். அதேபோல் 2வது பேட்டிங் ஆடிய அணியே சூப்பர் ஓவரில் முதல் பேட்டிங் ஆட வேண்டும். சூப்பர் ஓவருக்கான பந்தை கேப்டன்கள் முடிவு செய்யலாம். தேவையென்றால் ஒரே பந்திலும் இரு அணிகளும் பவுலிங் செய்து கொள்ளலாம்.
2 சூப்பர் ஓவர்களுக்கும் இடையில் 5 நிமிடங்கள் மட்டுமே ஓய்வு அளிக்கப்படும். அதேபோல் முதல் சூப்பர் ஓவர் சமனில் முடிந்தால், 2வது சூப்பர் ஓவர் நடத்தப்படும். ஆனால் இம்முறை 2வது பேட்டிங் செய்த அணி, முதல் பேட்டிங் ஆட வேண்டும். இம்முறை 2 அணிகளும் அதே பந்தை மட்டுமே பயன்படுத்த அனுமதிக்கப்படுவார்கள். எந்த முனையில் இருந்து பவுலிங் செய்யலாம் என்பதை கேப்டன்கள் முடிவு செய்து கொள்ளலாம்.
ஒருவேளை சூப்பர் ஓவரின் போது 2 விக்கெட்டுகள் வீழ்த்தப்பட்டால், அந்த அணியின் பேட்டிங் முடிவுக்கு வரும். ஒரே பவுலரே 2 சூப்பர் ஓவர்களையும் வீச முடியாது. ஒருவேளை 2 சூப்பர் ஓவர்கள் முடிவிலும் வெற்றியாளரை தேர்வு செய்ய முடியவில்லை என்றால், இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளிகள் அளிக்கப்படும். அதெபோல் சூப்பர் ஓவர் அதிகபட்சமாக ஒரு மணி நேரத்திற்குள் நடத்தி முடிக்கப்பட்டிருக்க வேண்டும். அதற்குள் எத்தனை சூப்பர் ஓவர் வேண்டுமானாலும் நடத்தலாம் என்று கூறப்பட்டுள்ளது.