பாகிஸ்தான் ஆண்கள் கிரிக்கெட் அணி பாகிஸ்தான் மக்களுக்கு துரோகம் செய்வதாக பாகிஸ்தான் முன்னாள் வீரர் பசித் அலி கடுமையான முறையில் விமர்சனம் செய்திருக்கிறார்.
தற்போது பாகிஸ்தான் அணி நியூசிலாந்து நாட்டிற்கு சென்று ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடர் மற்றும் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர்களில் விளையாடிக் கொண்டு வருகிறது. இந்த இரண்டு தொடர்களிலும் பாகிஸ்தான் அணி மிக மோசமாக விளையாடி மீண்டும் மீண்டும் பாகிஸ்தான் கிரிக்கெட் ரசிகர்களை ஏமாற்றத்திற்கு உள்ளாக்கி கொண்டிருக்கிறது.
இரண்டு தொடர்களின் விவரம்
நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் செய்த பாகிஸ்தான் அணி சல்மான் அலி ஆகா தலைமையில் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை விளையாடியது. இதில் நான்கு போட்டிகளை தோற்று தொடரை இழந்தது. இந்த அணியில் பந்துவீச்சாளர்கள் அனுபவம் உள்ளவர்களாகவும் பேட்ஸ்மேன்கள் அனுபவம் அற்றவர்களாகவும் இருந்தார்கள். எனவே இது பெரிய விமர்சனமாக மாறவில்லை.
இதைத் தொடர்ந்து முகமது ரிஸ்வான் தலைமையிலான பாகிஸ்தான் அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் முதல் இரண்டு போட்டிகளையும் தோற்று தொடரை இழந்திருக்கிறது. இதில் பேட்டிங் மற்றும் பவுலிங் என அனுபவம் வாய்ந்த பாகிஸ்தான் வீரர்கள் இடம் பெற்றிருக்கிறார்கள். ஆனால் எதிர்த்து விளையாடிய நியூசிலாந்து அணியில் பல முன்னணி வீரர்கள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. எனவே இது விமர்சனமாக மாறியிருக்கிறது.
எங்களுக்கு துரோகம் செய்கிறார்கள்
இதுகுறித்து பசித் அலி பேசும் பொழுது “பாகிஸ்தான் அணி எங்களுக்கு துரோகம் செய்துவிட்டது. நாங்கள் என்ன மாதிரியான கிரிக்கெட் விளையாடுகிறோம் என்று எங்களுக்கு புரியவில்லை. டெரில் மிட்சல் வீழ்த்தப்பட்ட பிறகு பாகிஸ்தான் வலிமையான மறுபிரவேசம் செய்தது. ஆனால் மோசமான கேப்டன்சி காரணமாக அங்கிருந்து போட்டியை தவறவிட்டது. இது எங்களுடைய பாகிஸ்தான் அணியே கிடையாது”
இதையும் படிங்க : சிஎஸ்கே கையில் இருக்கும் வெற்றிக்கான 2 வழிகள்.. இந்த முறையாவது உணர்வார்களா? – முழு அலசல்
“எங்கள் அணியில் முதல் ஆறு பேட்ஸ்மேன்களான பிராட்மேன்கள் ஒற்றை இலக்கத்தில் வெளியேறினார்கள். இந்த போட்டியில் நசீம் ஷா அரை சதம் அடிக்க வில்லை என்றால் பாகிஸ்தான் அணி மிக மோசமான தோல்வியை சந்தித்திருக்கும். இந்த நியூசிலாந்து அணி சி அணி போல இருக்கிறது. இந்த அணியிடமும் தோற்பதற்கு பாகிஸ்தான் அணி பேசாமல் பாகிஸ்தான் நாட்டிற்கு திரும்பி விடலாம்” என்று கூறியிருக்கிறார்.