இன்று மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டியில் பங்களாதேஷ் அணியை இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. இந்த போட்டியில் ஏற்பட்ட படுதோல்வி குறித்து பங்களாதேஷ் அணியின் கேப்டன் பேசி இருக்கிறார்.
இன்று இந்திய அணி நிர்வாகம் வித்தியாசமான திட்டங்களுடன் நேரடியாக மயங்க் யாதவ் மற்றும் நிதீஷ் குமார் ரெட்டி இருவரையும் அறிமுகப்படுத்தியது. மேலும் மூன்று வருடங்களாக இந்திய அணியில் இடம் பெற காத்திருந்த வருண் சக்கரவர்த்திக்கு உடனடியாக வாய்ப்பு கொடுத்தது.
புதிய மைதானத்தில் சூரியகுமார் சிறந்த முடிவு
இந்த போட்டி நடக்கும் குவாலியர் மைதானம் புதியது என்பதால் ஆடுகளம் எப்படி இருக்கும் என்பது தெரியாது. எனவே சூரியகுமார் யாதவ் டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தார். அசத்தலாக பந்து வீசிய வருண் சக்கரவர்த்தி மற்றும் அர்ஸ்தீப் சிங் தலா மூன்று விக்கெட் வீழ்த்தினார்கள். மெஹதி ஹசன் மிராஸ் அதிகபட்சமாக 32 பந்தில் 35 ரன் எடுத்தார். பங்களாதேஷ் 19.5 ஓவரில் 127 ரன் எடுத்து ஆல் அவுட் ஆனது.
இதை தொடர்ந்து விளையாடிய இந்திய அணிக்கு தொடக்க ஆட்டக்காரர் சஞ்சு சாம்சன் 19 பந்தில் 29 ரன்கள், கேப்டன் சூரியகுமார் யாதவ் 14 பந்தில் 29 ரன்கள், ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்டியா ஆட்டம் இழக்காமல் 16 பந்தில் 39 ரன்கள் அதிரடியாக எடுக்க, இந்திய அணி வெறும் 11.5 ஓவரில் மூன்று விக்கெட் இழப்புக்கு இலக்கை எட்டி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
எங்களிடம் திட்டமே இல்லை
பங்களாதேஷ் கேப்டன் நஜ்முல் சாந்தோ பேசும்பொழுது “நாங்கள் சரியாக தொடங்கவில்லை என்று நினைக்கிறேன். டி20 கிரிக்கெட்டில் பவர் பிளே மிகவும் முக்கியமானது. ஆனால் நாங்கள் அதில் சரியாக விளையாடவில்லை. பாசிட்டிவ் கிரிக்கெட்டை விளையாடுவதே எங்களுடைய திட்டமாக இருந்தது. ஆனால் நாங்கள் சில ஓவர்களை எப்படி அணுகி விளையாட வேண்டும் என்பதில் சரியாக இல்லை”
இதையும் படிங்க : 3 வருஷம் கழிச்சு எனக்கு மறுபிறவி.. அஸ்வின் அண்ணா கூட இருந்தது இதுல ஹெல்ப் பண்ணுச்சு – வருண் சக்கரவர்த்தி நெகிழ்ச்சி
“எங்களிடம் அதிகம் திட்டம் இல்லை என்று தெரிகிறது. நாங்கள் அடுத்த போட்டியில் சரியான திட்டங்களுடன் வர வேண்டும். மேலும் சரியாக ஸ்ட்ரைக் ரொட்டேட் செய்து விளையாட வேண்டும். விக்கெட்டுகளை கையில் வைத்திருந்தால் நல்ல ஸ்கோர் எடுக்க முடியும். நாங்கள் நல்ல ஸ்கோர் எடுக்கவில்லை. எங்களுடைய பந்துவீச்சாளர்கள் நன்றாகவே பந்து வீசினார்கள். நாங்கள் அவர்களுக்கு நல்ல ஸ்கோர் கொடுக்கவில்லை” என்று கூறியிருக்கிறார்.