இந்த ஆண்டு பிப்ரவரி 19ஆம் தேதி பாகிஸ்தானின் துவங்க இருக்கும் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரை பங்களாதேஷ் அணி கைப்பற்றும் என அந்த அணியின் கேப்டன் நஜ்முல் சாந்தோ நம்பிக்கை தெரிவித்து இருக்கிறார்.
ஒருநாள் கிரிக்கெட் வடிவத்தில் நடைபெற இருக்கும் இந்த தொடரில் மொத்தம் எட்டு அணிகள் பங்கு பெறுகின்றன. இதில் இந்தியா, பங்களாதேஷ், பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகள் ஒரு பிரிவில் இடம் பெற்று இருக்கின்றன. இந்திய அணி பங்களாதேஷ் அணிக்கு எதிராக தனது முதல் போட்டியில் பிப்ரவரி 20ஆம் தேதி துபாய் மைதானத்தில் விளையாடுகிறது.
பலவீனமான பங்களாதேஷ் அணி
கடந்த ஆண்டு இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் வருவதற்கு முன்பாக பாகிஸ்தானில் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி இரண்டு போட்டிகளையும் வென்று தொடரை கைப்பற்றி பங்களாதேஷ் அணி வரலாற்று சாதனை படைத்திருந்தது. அந்த நம்பிக்கையுடன் நஜ்முல் சாந்தோ தலைமையில் இந்தியாவிற்கு சுற்றுப் பயணம் செய்திருந்தது.
இந்த சுற்றுப்பயணம் பங்களாதேஷ் அணியின் தன்னம்பிக்கையை உடைக்கும் அளவுக்கு மிக மோசமாக அமைந்தது. பாகிஸ்தான் அணியை எளிதாக வென்ற பங்களாதேஷ் அணி, இந்திய அணியிடம் மிக எளிதாக தோல்வியடைந்தது. மேலும் தங்கள் அணியில் 180 ரன்கள் எடுப்பதற்கு டி20 கிரிக்கெட்டில் பேட்ஸ்மேன்கள் இல்லை என பங்களாதேஷ் கேப்டன் வெளிப்படையாக கூறும் அளவுக்கு நிலைமை மோசமாக சென்றது என்பது குறிப்பிடத்தக்கது.
சாம்பியன் ஆகவே செல்கிறோம்
நடைபெற இருக்கும் சாம்பியன்ஸ் டிராபி தொடர் குறித்து பேசி இருக்கும் பங்களாதேஷ் கேப்டன் நஜ்முல் சாந்தோ “நாங்கள் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் சாம்பியன் ஆவதற்காக செல்கிறோம். இந்த தொடரில் விளையாட இருக்கும் எட்டு அணிகளும் சாம்பியன் ஆவதற்கு தகுதியான அணிகள். இவை அனைத்தும் தரமான அணிகள். எங்கள் அணி சாம்பியன் ஆவதற்கு தகுதி உடையது என நான் நம்புகிறேன்”
இதையும் படிங்க : மாற்று வீரரா யார் வேணா வரலாம்.. ஆனா பும்ராவை ரோஹித் இந்த இடத்துல மிஸ் பண்ணுவார்- சஞ்சய் மஞ்சுரேக்கர்
“இங்கு யாரும் கூடுதலான அழுத்தத்தை உணர மாட்டார்கள். எல்லோரும் தங்கள் அணி சாம்பியன் ஆக வேண்டும் என்கின்ற காரணத்திற்காக விளையாட வந்திருக்கிறார்கள். அவர்கள் அவர்களுடைய திறமையை நம்புகிறார்கள். நமக்கு கடவுள் என்ன எழுதி இருக்கிறார் என்று தெரியாது. நாங்கள் கடினமாக உழைத்து செய்ய வேண்டியதை செய்வோம். எங்களுடைய இலக்கை அடைய முடியும் என்று நம்புகிறேன்” எனத் தெரிவித்திருக்கிறார்.






