“2007 டி20 உலககோப்பைக்கு என்னை அழைத்தபோது…” – தோனி தலைமையில் விளையாடியதை பற்றி பேசிய ரோகித் சர்மா!

0
546

2007 ஆம் ஆண்டு டி20 உலக கோப்பை வென்ற இந்திய அணியில் இடம்பெற்ற ரோகித் சர்மா, தோனி தலைமையில் விளையாடியதை மனம் திறந்து பேசியுள்ளார்.

டி20 உலக கோப்பைத் தொடர் முதல் முதலாக 2007 ஆம் ஆண்டு துவங்கியது. 2022 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் எட்டாவது டி20 உலக கோப்பை தொடர் நடைபெற உள்ளது. இதில் 16 அணிகள் பங்கேற்கின்றன. முதல்முறையாக இந்திய அணியை உலகக் கோப்பை தொடருக்கு வழிநடத்தி செல்கிறார் கேப்டன் ரோகித் சர்மா.

15 வருடங்களுக்கு முன்பு முதல் டி20 உலக கோப்பைத் தொடரில் இடம்பெற்று, எட்டாவது டி20 உலக கோப்பையிலும் இடம்பெற்றுள்ள வெகு சில வீரர்களில் கேப்டன் ரோகித் சர்மாவும் ஒருவர். தற்போது டி20 உலக கோப்பை அணியில் இருக்கும் தினேஷ் கார்த்திக் முதல் டி20 உலக கோப்பையில் விளையாடிய பெருமையை பெற்று இருக்கிறார்.

அக்டோபர் 15ம் தேதி அனைத்து அணிகளின் கேப்டன்கள் சந்திப்பு நடைபெற்றது. அதன் பிறகு புகைப்படங்கள் எடுத்துக்கொண்டு பத்திரிகையாளர்களையும் சந்தித்து பதில் அளித்து இருக்கின்றனர் பல்வேறு அணிகளின் கேப்டன்கள். இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா பத்திரிகையாளர்கள் சந்திப்பில் ஈடுபட்ட போது பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்து இருக்கிறார்.

குறிப்பாக பாகிஸ்தான் அணிக்கு எதிரான இந்திய அணியின் பிளேயிங் லெவன் எவ்வாறு இருக்கும்? பும்ரா இடத்திற்கு வந்திருக்கும் முகமது சமி, கொரோனா தொற்றில் இருந்து மீண்டு வந்து உடல் தகுதியுடன் இருக்கிறாரா? முதல் உலகக் கோப்பையிலும், தற்போது நடைபெறும் உலக கோப்பையிலும் பங்கேற்றிருக்கும் உங்களுக்கு என்ன வித்தியாசங்கள் தெரிகிறது? என பல்வேறு கேள்விகளுக்கு தனது அனுபவங்களில் பதில் தெரிவித்தார்.

தோனி தலைமையில் முதல் உலகக் கோப்பை விளையாடிய போது எவ்வாறு இருந்தது? என கேட்கப்பட்ட கேள்விக்கு பதில் அளித்த அவர், “உலக கோப்பை அணியில் பங்கேற்பதற்கு என்னை அழைத்த போது, முதலில் எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் தான் சென்றேன். தனிப்பட்ட முறையில் எனக்கும் அது முதல் உலகக் கோப்பை என்பதால் அதற்கேற்றார் போல நான் செயல்பட்டேன். உலக கோப்பை வெல்லும் வரை எனக்கு அதைப் பற்றிய புரிதல்கள் எதுவும் இல்லை. பின்னாளில் இவ்வளவு மதிப்பு பெற்றதாக மாறும் என்றும் நான் அப்போது உணரவில்லை.” என்றார்.

மேலும் தற்போது மற்றும் 2007 ஆம் ஆண்டு உலக கோப்பைக்கும் உள்ள வித்தியாசம் என்னவென்று கேட்டபோது, “15 ஆண்டுகாலம் இது ஒரு மிகப்பெரிய பயணமாக அமைந்து இருக்கிறது. அப்போது 140 முதல் 150 ரன்கள் அடித்தால் எளிதில் கட்டுப்படுத்தி விடலாம். ஆனால் தற்போது அதை 14-15 ஓவர்களில் அடித்து விடுகிறார்கள். அந்த அளவிற்கு வீரர்களுக்கு பக்குவம் வளர்ந்திருக்கிறது.” என்றார்.