பாகிஸ்தான் அணியின் முன்னணி கிரிக்கெட் வீரரான பாபர் ஆசம், சமீபத்தில் தென் ஆப்பிரிக்க அணியின் முன்னாள் நட்சத்திர ஆட்டக்காரர் ஆன ஏபி டிவில்லியர்சின் யூடியூப் சேனலில் தனது கிரிக்கெட் காலத்தில் சிறந்த பேட்ஸ்மேன் வீரரை தேர்வு செய்து இருக்கிறார்.
உலக கிரிக்கெட்டில் தரமான பேட்டிங் டெக்னிக் கொண்ட முன்னணி பேட்ஸ்மேன்களில் ஒருவர் பாபர் ஆசம். வேகப்பந்து வீச்சினை மட்டுமல்லாமல் சுழற்பந்து வீச்சையும் திறம்பட சமாளித்து ஆடும் திறமை கொண்டவரான இவர், டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட்டில் பல்வேறு சாதனைகளை நிகழ்த்தி இருக்கிறார். ஒரு கேப்டனாக பாகிஸ்தான் அணிக்கு பல வெற்றிகளை பெற்றுக் கொடுத்தாலும், ஐசிசி தொடர்களில் இவரது தலைமையில் செல்லும் பாகிஸ்தான் அணி தோல்விகளையே சந்தித்து வருகிறது.
எடுத்துக்காட்டாக அண்மையில் நடைபெற்ற ஒரு நாள் உலக கோப்பை மற்றும் டி20 உலக கோப்பையை சொல்லலாம். ஒரு நாள் உலகக் கோப்பையில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வெளிப்படுத்தினாலும் டி20 உலக கோப்பையில் மோசமான தோல்விகளை சந்தித்து லீக் சுற்றோடு வெளியேறிய நிலையில், பாகிஸ்தான் அணி பல்வேறு விமர்சனங்களை சந்தித்தது.
எனவே இதை கவனத்தில் கொள்ளாமல் அடுத்து வரும் தொடர்களில் மட்டும் கவனம் செலுத்தி வரும் பாபர் ஆஸம் அண்மையில் தென் ஆப்பிரிக்க முன்னாள் வீரர் டிவிலியர்ஸ் இன் யூடியூப் சேனலில் கலந்து கொண்டு கலகலப்பான கேள்விகளுக்கு பதில் அளித்துக் கொண்டிருந்தார். அப்போது தான் சந்தித்த கடினமான பந்துவீச்சாளர் பேட் கம்மின்ஸ் என்று கூறிய பாபர் ஆஸம், அவரது காலத்தில் சிறந்த பேட்ஸ்மேனை தேர்வு செய்யும் படி கேட்டபோது பாபர் விரைவாக டிவில்லியர்ஸ் பெயரைத் தேர்வு செய்தார்.
அப்போது அதை கண்டு மகிழ்ந்த டிவிலியர்ஸ் தன்னைத் தவிர வேறு பேட்ஸ்மேன் தேர்வு செய்ய கேட்டபோது, பாபர் பிடிவாதமாக மீண்டும் அவரையே தேர்வு செய்தார். கலகலப்பாக சென்ற இந்த நிகழ்ச்சியில் மேலும் பேசிய பாபர் ஆசம் விராட் கோலி, ஜோ ரூட் மற்றும் வில்லியம்சன் ஆகிய சமகால கிரிக்கெட்டர்களிடையே பேட்டிங் நுட்பங்கள் குறித்து பேசுவதாகவும் கூறியிருக்கிறார்.
இதையும் படிங்க:சச்சின் சாதனையை ஜோ ரூட் உடைப்பது உறுதி.. 3 மாசத்துல இங்கிலாந்து இந்த மாதிரி மாறிடுச்சு – மைக்கேல் வாகன் கருத்து
இதுகுறித்து பாபர் விரிவாக கூறும்போது “நான் விராட் கோலி, ஜோ ரூட் மற்றும் வில்லியம்சன் ஆகியோரிடம் நிறைய நேரம் செலவிடுவேன். அவர்கள் உங்களுக்கு ஆலோசனைகளை வழங்க எப்போதும் தயாராக இருப்பார்கள். இத்தகைய வீரர்களிடமிருந்து நான் நிறைய கற்றுக் கொள்கிறேன்.மேலும் நான் பணக்கார குடும்பத்திலிருந்து எல்லாம் கிரிக்கெட் விளையாட வரவில்லை. மேலும் எங்களிடம் பொருளாதாரம் ரீதியாக பிரச்சனை இருந்த போதும் என் பெற்றோர்கள் எனக்கு தொடர்ந்து ஆதரவு அளித்தனர்” என்று கூறி இருக்கிறார்.