நான் “மேன் ஆப் தி மேட்ச்” வாங்க முக்கிய காரணமாக இருந்தது இதுதான்; அக்ஸர் பட்டேல் ஓபன் டாக்!

0
20

நான் ஆட்டநாயகன் விருது வாங்கியதற்கு முக்கிய காரணம் இது மட்டும் தான் என்று மனம் திறந்து பேசி இருக்கிறார் அக்ஸர் பட்டேல்.

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதியே இரண்டாவது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பேட்டிங் செய்தது. அணி விக்கெட் கீப்பர் சாய் ஹோப் மிகச்சிறப்பாக விளையாடி 115 ரன்கள் அடித்தார். கேப்டன் நிக்கோலஸ் பூரான் 24 ரன்கள் அடிக்க 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழப்பிற்கு 311 ரன்கள் எடுத்திருந்தது வெஸ்ட் இண்டீஸ் அணி.

இலக்கை துரத்திய இந்திய அணிக்கு சிறப்பான துவக்கம் கிடைக்கவில்லை. தவான் ரன்களுக்கும், கில் 43 ரன்களுக்கும் ஆட்டம் இழந்தனர். 78 ரன்களுக்குள் இந்திய அணி மூன்று விக்கெட்டுகளை இழந்தபோது, ஸ்ரேயாஷ் மற்றும் சஞ்சு சாம்சன் இருவரும் ஜோடி சேர்ந்து கிட்டத்தட்ட நூறு ரன்கள் அடித்தனர். பின்னர் வந்த தீபக் ஹூடா 39 ரன்களுக்கு ஆட்டம் இழந்தார்.

கடைசி பத்து ஓவர்களில் இந்திய அணிக்கு நூறு ரன்கள் தேவைப்பட்டபோது, ஐந்து விக்கெட்டுகளை இழந்திருந்தது. அச்சமயம் களமிறங்கிய அக்சர் பட்டேல் தனது அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். தொடர்ந்து சிக்சர் மற்றும் பவுண்டரிகளாக விளாசி அணியை வெற்றியை நோக்கி எடுத்துச் சென்றார். இறுதியில் இந்திய அணி இரண்டு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

35 பந்துகளில் 64 ரன்களை அடித்திருந்த அக்சர் பட்டேல் ஐந்து பவுண்டர்கள் மற்றும் ஐந்து சிக்ஸர்கள் விளாசினார். அணியின் வெற்றிக்கு இறுதிவரை ஆட்டம் இழக்காமல் உதவிய இவருக்கு ஆட்டநாயகன் விருது கொடுக்கப்பட்டது. அப்போது பேசிய அக்சர் பட்டேல் கூறுகையில்,

“இது எனக்கு மிகவும் நெருக்கமான ஆட்டம். கடினமான சூழலில் அணிக்கு பங்களிப்பை கொடுத்தது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. மேலும் எனது ஆட்டம் தொடரை கைப்பற்றுவதற்கும் உதவி இருக்கிறது. கடைசி 10 ஓவர்கள் இருக்கையில் நிதானத்துடன் ஆடினால் அணிக்கு மேலும் அழுத்தம் ஏற்படும் என்பதால், எந்தவித தயக்கமும் இன்றி பவுண்டரிகளை அடிப்பதற்கு குறிக்கோளாக இருந்தேன்.

ஐபிஎல் போட்டிகளில் விளையாடிய அனுபவம் தற்போது எனக்கு கைகொடுத்து வருகிறது. கடினமான சூழலில் அமைதியாகவும் கவனமுடனும் இருக்க வேண்டும். ஒவ்வொரு பந்துக்கும் எப்படி எதிர்வினை ஆற்ற வேண்டும் என்பதை ஐபிஎல் தொடர் எனக்கு கற்றுக் கொடுத்திருக்கிறது. அதன் உதவியுடன் இன்று சிறப்பாக செயல்படவும் முடிந்தது.” என்று தனது ஆட்டநாயகன் விருது பெற்றபோது, ஐபிஎல் தொடர் எவ்வாறு உதவியது பற்றி குறிப்பிட்டுள்ளார்.

இந்த இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டி வருகிற ஜூலை 27 ஆம் தேதி நடக்க உள்ளது.