இந்திய அணி நடப்பு டி20 உலக கோப்பையில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான பரபரப்பான போட்டியில் 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் இந்திய வீரர் அக்சர் பட்டேல் சிறப்பாக செயல்பட்டிருந்தார். இதில் கடினமான நேரத்தில் 16வது ஓவரில் என்ன மாதிரியான திட்டத்தை அவர் பந்துவீச்சில் கொண்டு வந்தார் என்பது குறித்து கூறியிருக்கிறார்.
இந்திய அணி பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் முதலில் பேட்டிங் செய்து 119 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்த போட்டியில் விராட் கோலி ரோஹித் சர்மா இருவரும் அடுத்தடுத்து ஆட்டம் இழக்க இந்திய அணிக்கு பெரிய நெருக்கடியான நிலைமை உருவானது.
பாகிஸ்தான் அணியிடம் இடதுகை ஸ்பின்னர் மற்றும் லெக் ஸ்பின்னர் இருவர் இருந்ததால், இடதுகை பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட் உடன் இன்னொரு இடதுகை பேட்ஸ்மேன் அக்சர் படேல் ஆச்சரியம் அளிக்கும் வகையில் அனுப்பப்பட்டார். பேட்டிங் செய்வதற்கு கடினமான ஆடுகளத்தில் அவர் 18 பந்தில் மிக முக்கியமான 20 ரன்கள் எடுத்தார்.
இதற்கு அடுத்து பந்துவீச்சில் பும்ரா 15ஆவது ஓவரில் சிறப்பாக விளையாடி வந்த முகமது ரிஸ்வானை வீழ்த்தி மூன்று ரன்கள் மட்டுமே கொடுத்து ஆட்டத்தை இந்தியா பக்கம் திருப்பினார். இதுதான் போட்டியில் இந்தியாவுக்கு கிடைத்த முதல் திருப்புமுனை என்று சொல்லலாம்.
இதற்கு அடுத்து ஸ்பின்னருக்கு ஒரு ஓவர் மீதம் இருக்கையில், பதினாறாவது ஓவரை அக்சர் படேல் கையில் தைரியமாக ரோஹித் சர்மா கொடுத்தார். களத்தில் இடதுகை பேட்ஸ்மேன் இமாத் வாசிம் இருந்தார். இடது கை சுழல் பந்துவீச்சாளரான அக்சர் படேல் இமாத் வாசிமுக்கு பவுண்டரி சிக்ஸர் தர வாய்ப்புகள் இருந்தது. ஆனால் அக்சர் படேல் அவருக்கு எதிராக நான்கு டாட் பந்துகள் வீசி, அந்த ஓவரில் இரண்டு ரன் மட்டுமே தந்து அணிக்கு வலிமையான இரண்டாவது திருப்புமுனையை உருவாக்கினார். மேலும் தான் வீசிய முதல் ஓவரின் முதல் பந்தில் விக்கெட்டும் கைப்பற்றி இருந்தார்.
இதையும் படிங்க : நாளை அமெரிக்க அணிக்கு எதிரான இந்திய உத்தேச பிளேயிங் XI.. ஜடேஜா துபே தேவையா.. சாம்சனுக்கு வாய்ப்பு கிடைக்குமா?
தற்பொழுது இதுகுறித்து சாகல் பேட்டி எடுக்கும் பொழுது கூறிய அக்சர் படேல் “காற்று வீசியதால் இமாத் வாசிம் பலத்திற்கு பந்து வீசக்கூடாது என நினைத்தேன். குறிப்பாக அவரை லெக் சைடு மிட் விக்கெட் திசையில் அடிக்க விடக்கூடாது என முடிவு செய்தேன். எனவே கேப்டன் ரோஹித் சர்மாவிடம் ஆப்சைட் பாயிண்ட்டில் ஒரு பீல்டரை கேட்டு வாங்கினேன். இதனால் பந்தை ஆப் சைடு வெளியில் வீசினேன். இமாத் வாசிம் அதை கட் அடிப்பது கடினம். அப்படியே கட் அடித்தாலும் பெரிய ரன்கள் வராது. இதுதான் என்னுடைய திட்டமாக 16வது ஓவரில் இருந்தது” என்று கூறியிருக்கிறார்.