“ஆஸ்திரேலியா போட்ட திட்டம்.. ஆடிப் போயிட்டேன்.. வேற லெவல்!” – அஷ்வின் ஆச்சரியமான பேச்சு!

0
6276
Ashwin

குஜராத் அகமதாபாத் மைதானத்தில் 13வது ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் இந்திய அணியை வீழ்த்தி ஆஸ்திரேலியா 6வது முறையாக உலக சாம்பியன் ஆனது நாம் அறிந்ததே.

இந்த இறுதிப் போட்டியில் டாஸ் வென்று ஆஸ்திரேலியா முதலில் பந்து வீசும் என்று ஆஸ்திரேலியா கேப்டன் அறிவித்த பொழுது எல்லோருமே ஆச்சரியமடைந்தார்கள்.

- Advertisement -

அதே சமயத்தில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா டாஸ் வென்றால் தாங்கள் முதலில் பேட்டிங்தான் செய்வோம் என்று கூறியிருந்தார்.

இந்த நிலையில் தான் ஆஸ்திரேலியா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்ததோடு இந்திய அணியை 240 ரன்களுக்கு கட்டுப்படுத்தி ஆச்சரியத்தை மேலும் மேலும் கூட்டியது.

இதற்கு அடுத்து இரண்டாவது பகுதியில் ஆஸ்திரேலிய அணி பேட்டிங் செய்யும் பொழுது ஆடுகளம் எளிமையாக மாறியது. ஆஸ்திரேலியா இந்தியாவை விட இந்திய மைதானத்தின் சூழ்நிலையை மிகச் சிறப்பாக கணித்து அடித்திருந்தது.

- Advertisement -

இது குறித்து இந்திய அணி வீரர் ரவிச்சந்திரன் அஷ்வின் கூறும் பொழுது “ஆஸ்திரேலியா அணி இறுதிப் போட்டியில் திட்டத்தில் மிகச் சிறப்பாக இருந்தது. இந்தப் போட்டியில் அவர்களது தந்திரங்களை கண்டு நான் அதிர்ச்சி அடைந்தேன். உலகக் கோப்பை தொடரில் கம்மின்ஸ் பந்துவீச்சில் தடுமாறிக் கொண்டிருந்தார். ஆனால் கடைசி நான்கு ஐந்து போட்டிகளாக அவர் அதிகபட்சம் கட்டர்கள் மட்டுமே வீசினார்.

இறுதிப் போட்டியில் கம்மின்ஸ் ஒரு ஆப் ஸ்பின்னரை போல தனக்கு பீல்டிங்கை வைத்துக் கொண்டார். அவர் தனது முழு பத்து ஓவரில் ஆறு மீட்டருக்கு மேல் மூன்று முறை மட்டுமே பந்தை வீசினார். அவர் பேட்ஸ்மேன்கள் டிரைவ் செய்யும் லென்த்தில் பந்தை வீசவே இல்லை.

ஆஸ்திரேலியா தனிப்பட்ட முறையில் என்னை ஏமாற்றி விட்டது. அவர்கள் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்து பெரிய ஸ்கோர் அடிப்பார்கள் என்று நான் நினைத்தேன். அகமதாபாத் ஆடுகளத்தின் மண் ஒரிசா ஆடுகளத்தின் மண் போல இருந்தது. இந்த ஆடுகளத்தில் அதிகம் பவுன்ஸ் இருக்காது. மேலும் களிமண் ஆடுகளம் என்பதால் ஆடுகளம் சேதமும் அடையாது.

நான் முதல் பாதி போட்டி முடிவடைந்த பொழுது ஆடுகளத்தை பார்வையிட்டுக் கொண்டிருந்தேன். அப்பொழுது ஆஸ்திரேலியாவின் ஜார்ஜ் பெய்லி இடம் நீங்கள் ஏன் முதலில் பேட்டிங் செய்யவில்லை என்று கேட்டேன்.

அவர்கள் இங்கு நிறைய ஐபிஎல் மற்றும் சர்வதேச போட்டிகள் விளையாடி அனுபவம் இருக்கின்ற காரணத்தினால், அவர்களுக்கு சிவப்பு மண் ஆடுகளம் இரண்டாவது பகுதியில் சிதைவதாகவும், களிமண் ஆடுகளம் மின்விளக்குகளின் கீழ் இரண்டாம் பகுதியில் விளையாட நன்றாக இருக்கிறது என்றும் கூறினார்!” என்று ஆச்சரியமாக தெரிவித்து இருக்கிறார்!