இங்கிலாந்து அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரை 5க்கு0 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா வெற்று பெறும் என்று ஆஸ்திரேலிய கிரிக்கெட் ஜாம்பவான் க்ளென் மெக்ராத் தெரிவித்துள்ளார். தற்போது நடந்து முடிந்த இங்கிலாந்து, இந்திய தொடரில் இரு அணிகளும் தலா 2 வெற்றியை பெற்று தொடரை சமன் செய்த நிலையில், இந்த கருத்தை அவர் கூறியுள்ளார்.
ஆஸ்திரேலியாவின் வலுவான பந்துவீச்சு அணியை நம்பி, மெக்ராத் இந்த தனது வழக்கமான கணிப்பை வெளியிட்டுள்ளார். நவம்பர் 21 ஆம் தேதி இந்த டெஸ்ட் தொடர் தொடங்கவுள்ளது. இது 2025-2027 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சைக்கிளில் ஆஸ்திரேலியாவின் முதல் உள்நாட்டு தொடராகும்.
ஆஷஸ் தொடரில் செயல்பாடு:
கடந்த 2010-11 தொடரில் ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட ஆண்ட்ரூ ஸ்ட்ராஸ் தலைமையிலான இங்கிலாந்து அணி 3-1 என்ற கணக்கில் வெற்றியைப் பெற்றது. இதன் பிறகு, ஆஸ்திரேலிய மண்ணில் ஒரு டெஸ்ட் போட்டியைக் கூட இங்கிலாந்து வெல்லவில்லை. கடந்த 2006-07 மற்றும் 2013-14 தொடர்களில் இரண்டு முறை முற்றிலும் தோல்வியடைந்ததுடன், 2017-18 சீசனில் 4-0 என்ற கணக்கில் படுதோல்வி அடைந்தனர்.
பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து அணி, ஆஸ்திரேலியாவின் அனுபவம் வாய்ந்த பந்துவீச்சு அணியான பாட் கம்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க், ஜோஷ் ஹேசில்வுட் மற்றும் நாதன் லயன் ஆகியோரை எதிர்கொள்வது மிகவும் கடினமாக இருக்கும் என மெக்ராத் நம்புகிறார். இது குறித்து பேசிய அவர், “நான் கணிப்பு செய்வது மிகவும் அரிது, இல்லையா?
மெக்ராத் கணிப்பு:
“ஆனால் வேறு கணிப்பைச் செய்ய முடியாது. 5-0. எங்கள் அணியில் எனக்கு மிகுந்த நம்பிக்கை உள்ளது. பாட் கம்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க், ஜோஷ் ஹேசில்வுட் மற்றும் நாதன் லயன் ஆகியோர் தங்கள் உள்நாட்டு நிலைகளில் சிறப்பாக செயல்படும்போது, இது மிகவும் கடினமாக இருக்கும். இங்கிலாந்தின் மோசமான பதிவையும் கருத்தில் கொண்டால், அவர்கள் ஒரு டெஸ்ட் போட்டியையாவது வெல்ல முடியுமா என்பது சுவாரஸ்யமாக இருக்கும்,” என்று மெக்ராத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: சிஎஸ்கே அணியிலிருந்து விலக அஸ்வின் முடிவு.. ஏலத்திற்கு முன்பே விடுவிக்குமாறு கோரிக்கை
ஆஸ்திரேலியா இந்த WTC சைக்கிளில் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக ஜூன்-ஜூலை மாதங்களில் 3-0 என்ற கணக்கில் வெற்றியுடன் தொடங்கியுள்ளது. 2023 ஆஷஸ் தொடரில் இங்கிலாந்து 2-2 என்ற கணக்கில் திரில் மிக்க சமநிலையைப் பெற்றாலும், 2015 ஆம் ஆண்டுக்கு பிறகு அவர்கள் ஆஷஸ் கோப்பையை வெல்லவில்லை. ஆஸ்திரேலியாவின் வேகமான, பவுன்ஸ் நிறைந்த ஆடுகளங்களுக்கு இந்த தொடர் திரும்புவதால், பாட் கம்மின்ஸ் தலைமையிலான அணி முழு வீச்சில் ஆதிக்கம் செலுத்தி இங்கிலாந்தை வீழ்த்தும் என மெக்ராத் கூறியுள்ளார்.






