இன்று டி20 உலகக்கோப்பை தொடரில் ஆஸ்திரேலியா அணி ஜிம்பாப்வே அணியிடம் 23 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இந்த தோல்வி குறித்து ஆஸ்திரேலியா அணியின் தற்காலிக கேப்டன் டிராவிஸ் ஹெட் பேசியிருக்கிறார்.
இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஜிம்பாப்வே அணி இரண்டு விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 169 ரன்கள் சேர்த்தது. தொடர்ந்து விளையாடிய ஆஸ்திரேலியா அணி தொடக்கத்திலேயே விக்கெட்டுகளை இழந்து, இறுதியில் 146 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட் ஆனது.
நாங்கள் நினைத்தபடி இல்லை
இந்த தோல்வி குறித்து பேசி உள்ள டிராவிஸ் ஹெட் கூறும் பொழுது “நாங்கள் டாஸ் வென்ற பொழுது இந்த மைதானம் சிறப்பானதாக பேட்டிங் செய்ய இருக்கும் என்று நினைத்தோம். ஆனால் பந்து கொஞ்சம் இங்கு நின்று வந்தது. மேலும் இரண்டு இன்னிங்ஸ்களிலும் அப்படியே இருக்கும் என்று உணர்ந்தோம். நாங்கள் ஜிம்பாபேவின் இரண்டு விக்கெட்டுகள் மட்டுமே எடுத்திருந்தால் கூட, அவர்கள் எடுத்த ரன்னை எங்களால் எடுக்க முடியும் என்று நம்பினோம்”
“இந்த ஸ்கோரை நாங்கள் எடுக்க முடியும் என்ற நம்பிக்கை எங்களிடம் இருந்தது. ஆனால் நாங்கள் துவக்கத்தில் அதிக விக்கெட்டுகளை இழந்ததால் அழுத்தத்தில் சிக்கிக் கொண்டோம். இந்த போட்டி முழுக்க இந்த மைதானம் பேட்டிங் செய்ய சிறந்தது என்கின்ற புள்ளி விபரங்கள்தான் கிடைத்தது. ஆனால் ஜிம்பாப்வே சிறப்பாக விளையாடி எங்களை வென்று இருக்கிறார்கள். நடுவில் எங்களுக்கு ஒரு நல்ல பார்ட்னர்ஷிப் கிடைத்தாலும் முடிவை எங்கள் பக்கம் மாற்ற முடியவில்லை”
2023ல் வென்றோம்
“எங்கள் அணியில் காயங்கள் வீரர்களுக்கு இருந்து வருகிறது. இதேபோல 2023 ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரிலும் எங்கள் அணியில் காயங்கள் இருந்து வந்தன. அந்தத் தொடரில் காயத்தின் காரணமாக ஆரம்பத்தில் நானே விளையாடாமல் இருந்தேன்”
இதையும் படிங்க: தம்பிங்க ஆஸியை அடிச்சத அண்ணனா சந்தோஷமா பார்த்தேன்.. என் பசங்க ஜெயிக்க விரும்புறாங்க – சிக்கந்தர் ராஸா பேட்டி
“ஆனால் நாங்கள் அந்த உலகக் கோப்பையில் இறுதிப் போட்டிக்கு வந்து இந்திய அணியையும் வென்றோம். மேலும் டாஸ் நிகழ்வின்போது நான் இந்த விஷயத்தைதான் சொல்லி இருந்தேன். எங்களால் இதிலிருந்து மீண்டு வர முடியும்” என்று கூறியிருக்கிறார்.






