தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான பரபரப்பான இரண்டாவது டி20 போட்டியில் ஆஸ்திரேலிய அணி மேக்ஸ்வெல் அதிரடியில் இரண்டு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றியது.
இருவருக்கும் இடையே மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் இரண்டு போட்டியில் இரு அணிகளும் தலா ஒரு போட்டியை வென்று தொடர் சமநிலையில் இருந்தது. இந்த நிலையில் இன்று தொடரை தீர்மானிக்கும் இரண்டாவது போட்டி நடைபெற்றது. போட்டிக்கான டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
முதலில் பேட்டிங் செய்ய வந்த தென் ஆப்பிரிக்க அணிக்கு தொடக்க ஆட்டக்காரர்கள் கேப்டன் மார்க்ரம் 1, ரியான் ரிக்கல்டன் 13 ரன்கள் எடுத்து வெளியேறினார்கள். அடுத்து வந்த அதிரடி வீரர் லுகான் பிரிட்டோரியஸ் 15 பந்துகளில் 24 ரன்கள் எடுத்தார்.
இதைத்தொடர்ந்து வந்த அதிரடி வீரர் டிவால்ட் பிரிவிஸ் 26 பந்துகளில் ஒரு பவுண்டரி மற்றும் 6 சிக்ஸர்கள் உடன் 53 ரன்கள் எடுத்தார். இறுதியில் வான்டர் டேசன் ஆட்டம் இழக்காமல் 26 பந்தில் 38 ரன்கள் எடுத்தார். தென் ஆப்பிரிக்கா அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 172 ரன்கள் சேர்த்தது. நாதன் எல்லீஸ் மூன்று விக்கெட் கைப்பற்றினார்.
இதைத் தொடர்ந்து விளையாடிய ஆஸ்திரேலியா அணிக்கு துவக்க ஆட்டக்காரர்கள் கேப்டன் மார்ஸ் அதிரடியாக 37 பந்தில் 54 ரன்கள், ஹெட் 18 பந்தில் 19 ரன்கள் எடுத்து வெளியேறினார்கள். இதற்கு அடுத்து இங்லீஷ் 0, கிரீன் 9, டிம் டேவிட் 17 ரன்கள் எடுத்து அடுத்தடுத்து ஆட்டம் இழக்க ஆஸ்திரேலியா அணிக்கு நெருக்கடி உருவானது.
இந்த நிலையில் ஒரு முனையில் உள்ளே வந்ததிலிருந்து அதிரடி காட்டிய மேக்ஸ்வெல் கடைசி கட்ட வீரர்களை வைத்துக் கொண்டு வெற்றியை நோக்கி அணியை அழைத்துச் சென்றார். மேக்ஸ்வெல் அரை சதத்தை கடந்திருந்த பொழுது அணியின் வெற்றிக்கு கடைசி ஓவரில் 10 ரன்கள் தேவைப்பட்டது. கைவசம் இரண்டு விக்கெட்டுகள் இருந்தது.
இதையும் படிங்க : ஒரே ஓவரில் தொடர்ந்து 4 சிக்சர்.. 22 பந்துகளில் தென்னாப்பிரிக்க வீரர் பிரவீஸ் அரைசதம்.. ஆஸ்திரேலியாவுக்கு எதிராக படைத்த சாதனை பட்டியல்
பரபரப்பான கடைசி ஓவரில் லுங்கி நிகிடி வீச முதல் இரண்டு பந்தில் மேக்ஸ்வெல் 6 ரன்கள் எடுத்தார். அடுத்த இரண்டு பந்தில் ரன் ஏதும் எடுக்கவில்லை. இதைத் தொடர்ந்து கடைசி இரண்டு பந்தில் நான்கு ரன்கள் தேவைப்பட்ட நிலையில், கடைசி ஓவரின் ஐந்தாவது பந்தில் பவுண்டரி அடித்து இரண்டு விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அணியை வெல்ல வைத்து தொடரையும் கைப்பற்ற வைத்தார். 36 பந்துகளை சந்தித்து 8 பவுண்டரி மற்றும் 2 சிக்ஸர்கள் உடன் 62 ரன்கள் எடுத்தார்.