இன்று பிரிஸ்பேன் கப்பா மைதானத்தில் ஆஸ்திரேலியா பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே நடைபெற்ற முதல் டி20 போட்டியில் ஆஸ்திரேலியா அணி ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் முன்னிலை எடுத்துக் கொண்டிருக்கிறது.
பாகிஸ்தான் அணி முதலில் நடைபெற்ற மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடரை இரண்டுக்கு ஒன்று என வென்று தொடரை கைப்பற்றியது. இந்த நிலையில் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டி இன்று நடைபெற்றது.
மீண்டும் திரும்பிய மேக்ஸ்வெல்
இந்த போட்டி மழையால் பாதிக்கப்பட்ட காரணத்தினால் மொத்தம் ஏழு ஓவர்கள் மட்டுமே என்று குறைக்கப்பட்டது. டாஸில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. ஆஸ்திரேலியா அணியின் துவக்க ஆட்டக்காரர்கள் மேத்யூ ஷார்ட் 4 பந்தில் 7 ரன்கள், ஜாக் பிரேசர் 5 பந்தில் 9 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்கள்.
இதைத்தொடர்ந்து டீம் டேவிட் 8 பந்தில் 10 ரன், ஸ்டோய்னிஸ் ஆட்டம் இழக்காமல் 7 பந்தில் 21ன் எடுத்தார்கள். ஒரு முனையில் மீண்டும் அதிரடிக்கு திரும்பிய கிளன் மேக்ஸ்வெல் 19 பந்தில் 5 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களுடன் 43 ரன்கள் எடுத்தார். 7 ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலியா அணி 4 விக்கெட் இழப்புக்கு 93 ரன்கள் எடுத்தது. பாகிஸ்தான் தரப்பில் அப்பாஸ் அப்ரிடி இரண்டு விக்கெட் கைப்பற்றினார்.
பந்து வீச்சில் மிரட்டிய ஆஸ்திரேலியா
இதைத்தொடர்ந்து பேட்டிங் செய்ய வந்த பாகிஸ்தான் அணிக்கு பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. அந்த அணி வெறும் 24 ரன்கள் எடுப்பதற்குள் முக்கிய ஆறு விக்கெட்டுகளை இழந்து போட்டியையும் அங்கேயே இழந்தது.
பாகிஸ்தான் அணியின் நட்சத்திர வீரர்களான கேப்டன் முகமது ரிஸ்வான் 0, பாபர் அசாம் 3, ஆகா சல்மான் 4 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்கள். மேலும் இளம் வீரர்கள் பர்கான் 8, உஸ்மான் கான் 4, இர்பான் கான் 0 ரன்னில் வெளியேறினார்கள்.
இதையும் படிங்க : 25 பவுண்டரி 13 சிக்ஸர்.. முச்சதம் அடித்த ஆர்சிபி வீரர்.. தக்க வைக்காமல் விட்ட சோகம்.. ரஞ்சி டிராபி 2024
இறுதியில் ஏழு ஓவர்கள் முடிவில் பாகிஸ்தான் அணி 9 விக்கெட் இழப்புக்கு 64 ரன்கள் எடுத்தது. ஆஸ்திரேலியா அணி 29 ரன்கள் வித்தியாசத்தில் முதல் டி20 போட்டியில் வெற்றி பெற்றது. மேலும் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியாவில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றதில்லை என்கின்ற சோகம் தொடர்கிறது.