இந்திய பெண்கள் அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலியா பெண்கள் அணி 122 ரன்கள் வித்தியாசத்தில் அதிரடி வெற்றி பெற்று தொடரையும் கைப்பற்றி இருக்கிறது.
தற்போது இந்திய பெண்கள் அணி ஹர்மன் பிரித்கவுர் தலைமையில் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடுவதற்கு ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப் பயணம் செய்திருக்கிறது. இதில் முதல் போட்டியில் தோல்வி அடைந்த இந்திய அணி இரண்டாவது போட்டியிலும் தோற்று தொடரை இழந்திருக்கிறது.
ஜார்ஜியா வோல் – எல்லீஸ் பெரி அதிரடி சதங்கள்
இன்று நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பெண்கள் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அந்த அடிக்கு முதல் விக்கெட்டுக்கு 116 பந்துகளில் 130 ரன்கள் பார்ட்னர்ஷிப் அதிரடியாக கிடைத்தது. துவக்க வீராங்கனைகள் லிட்ச்ஃபீல்டு 60 பந்தில் 63 ரன்கள், ஜார்ஜியா வோல் 87 பந்துகளில் அதிரடியாக 121 ரன்கள் எடுத்தார்கள்.
இதைத்தொடர்ந்து பேட்டிங் வரிசையில் மூன்றாவதாக வந்த நட்சத்திர வீராங்கனை எல்லீஸ் பெரி அதிரடியாக விளையாடி 75 பந்துகளில் 7 பவுண்டரிகள் மற்றும் 6 சிக்ஸர்கள் உடன் 105 ரன்கள் குவித்தார். ஆஸ்திரேலிய பெண்கள் அணி 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 371 ரன்கள் குவித்தது. இந்திய அணியின் பந்துவீச்சில் சைமா தாக்கூர் 3 விக்கெட் கைப்பற்றினார்.
இந்திய அணி படுதோல்வி
இதைத் தொடர்ந்து பெரிய இலக்கை நோக்கி விளையாடிய இந்திய அணிக்கு நட்சத்திர வீராங்கனைகள் ஸ்மிருதி மந்தனா 9, ஹர்லின் டியோல் 12, கேப்டன் ஹர்மன்பிரித் கவுர் 38, ஜெமிமா ரோட்டரிக்யூஸ் 43 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்கள்.
இதையும் படிங்க : இந்திய வீரர்களுக்கு ஐபிஎல் இருக்கு.. அவங்க அணுகுமுறை மோசமா இப்படித்தான் இருக்கும் – கவாஸ்கர் விமர்சனம்
இந்த முறை துவக்க வீராங்கனையாக அனுப்பப்பட்ட விக்கெட் கீப்பர் ரிச்சா கோஸ் 72 பந்துகளில் 54 ரன்கள் எடுத்தார். இந்திய அணி 44.5 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 249 ரன்கள் எடுத்து சுருண்டது. ஆஸ்திரேலியா அணியின் பந்துவீச்சில் சதர்லேண்ட் நான்கு விக்கெட் கைப்பற்றினார். ஆஸ்திரேலியா அணி 122 ரன்கள் வித்தியாசத்தில் வென்று, மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதல் இரண்டு போட்டிகளை வென்றதால் தொடரையும் கைப்பற்றியது.






