இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி தற்போது பெர்த் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் இந்திய அணி தற்போது இரண்டாவது இன்னிங்ஸ் விளையாடி வருகிறது.
இந்த சூழ்நிலையில் ஆஸ்திரேலியா அணியின் பயிற்சியாளர் மெக் டொனால்ட் இந்திய அணி குறித்து சில முக்கிய கருத்துக்களை கூறியிருக்கிறார்.
பெர்த் மைதானத்தில் நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி ஆஸ்திரேலிய வீரர்களின் சிறப்பான பந்துவீச்சால் 150 ரன்கள் குவித்து ஆட்டம் இழந்தது. அதற்குப் பிறகு தங்களது முதல் இன்னிங்ஸ் துவங்கிய ஆஸ்திரேலியா அணிக்கு இந்திய அணியின் பந்துவீச்சாளர்கள் சரியான பதிலடி கொடுத்தனர். அதிலும் குறிப்பாக இந்திய அணியின் கேப்டன் பும்ரா மிக அபாரமாக செயல்பட்டார்.
18 ஓவர்கள் வீசிய பும்ரா 30 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 11வது முறையாக 5 விக்கெட்டுகள் கைப்பற்றினார். இதில் ஹர்ஷித் ரானா 3 விக்கெட்டுகளும், சிராஜ் இரண்டு விக்கெட்டுகளும் வீழ்த்த ஆஸ்திரேலியா அணி 104 ரன்களுக்கு ஆட்டம் இழந்தது. இந்த சூழ்நிலையில் ஆஸ்திரேலியா அணியின் தலைமை பயிற்சியாளரான டொனால்ட் இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க திட்டம் உருவாக்க வேண்டும் என்று சில முக்கிய கருத்துகளை கூறியிருக்கிறார்.
இதுகுறித்து அவர் கூறும் பொழுது “முதலாவது இன்னிங்ஸில் இரண்டு பேட்டிங் யூனிட்டுகளுக்குமே கடினமானதாக இருந்தது. எங்களது பந்துவீச்சாளர்கள் விதிவிலக்கானவர்கள் என்று நினைத்தேன். எதிரணியும் பந்துவீச்சில் சிறப்பாக இருந்தாலும் நேற்று பேட்டிங் செய்ய கடினமானதாக இருந்தது. ஆனால் இரண்டாவது இன்னிங்ஸில் பேட்டிங் செய்வதற்கு சற்று வித்தியாசமாக இருக்கிறது.
இதையும் படிங்க:இத கவனிச்சீங்களா.. கேஎல் ராகுல் நல்ல ஆடறதுக்கு காரணம் இதுதான்.. இனி மாஸ்தான் – மேத்யூ ஹைடன் பேட்டி
மேலும் எந்தவித சந்தேகமும் இல்லாமல் இந்திய அணியின் அனைத்து பந்துவீச்சாளர்களையும் எதிர்த்து விளையாட என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து அதற்கான திட்டம் உருவாக்க வேண்டும். பும்ரா மட்டுமே எங்களது பிரச்சனை அல்ல. பும்ராவின் பந்துவீச்சை மட்டுமே குறிப்பிட்டு கூறுவது சரியாக இருக்காது” என்று கூறியிருக்கிறார். இந்திய அணி தனது இரண்டாவது இன்னிங்ஸில் விக்கெட் இழப்பின்றி 172 ரன்கள் குவித்து இருப்பது குறிப்பிடத்தக்கது. இன்னும் மூன்று நாட்கள் ஆட்டம் மீதம் இருக்கும் நிலையில் இந்திய அணியின் கை நன்றாக ஓங்கி இருப்பது தெரிகிறது. எனவே இதில் இந்திய அணி வெற்றி பெறுமா என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.