ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடருக்கு பிறகு பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் முழுமையாக கேப்டன் பொறுப்பில் இருந்து விலகிக் கொண்டார்.
இதற்கு அடுத்து பாகிஸ்தான் அணியின் வெள்ளைப்பந்து கேப்டனாக ஷாகின் அப்ரிடி, டெஸ்ட் கிரிக்கெட் கேப்டனாக ஷான் மசூத் ஆகியோர் நியமிக்கப்பட்டார்கள். பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய உயர் பொறுப்பில் முகமது ஹபிஸ் நியமிக்கப்பட்டார்.
இந்த நிலையில் பாகிஸ்தான் அணி தற்பொழுது ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப் பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சுழற்சியின் ஆரம்பக்கட்டம் என்பதால் இரு அணிகளுக்குமே இந்த தொடர் மிக முக்கியம்.
இந்த நிலையில் அதிகாரப்பூர்வமான டெஸ்ட் தொடருக்கு முன்பாக ஆஸ்திரேலிய பிரதமர் லெவன் உடன் பாகிஸ்தான் அணி நான்கு நாள் டெஸ்ட் போட்டி ஒன்றில் பயிற்சி பெறுவதற்கு விளையாடியது. இந்த போட்டியின் ஆடுகளம் ஆஸ்திரேலிய வழக்கமான ஆடுகளங்கள் போல் இல்லாமல் மெதுவானதாக இருந்தது. இதை ஆஸ்திரேலியா வழக்கமாகவே எல்லா அணிகளுக்கும் செய்து வருகிறது.
தற்பொழுது இதுகுறித்து பேசி உள்ள முகமது ஹபிஸ் கூறும்பொழுது “உண்மையாக இந்த பயிற்சி ஆட்டத்தில் நாங்கள் ஒரு அணியாக நிறைய பெட்டிகளை டிக் செய்து இருக்கிறோம். ஆனால் பயிற்சி ஆட்டத்தில் நாங்கள் விளையாடிய ஆடுகளம் ஏமாற்றமாகவும் ஆச்சரியமாகவும் இருந்தது. இது மிகவும் மெதுவான ஆடுகளம். இருந்தாலும் நாங்கள் வரவிருக்கும் சவாலுக்கு தயாராக இருக்கிறோம்.
எல்லோருக்கும் தெரிந்த இந்த விஷயம்தான் ஆனால் இதை மீண்டும் மீண்டும் செய்வது தேவையற்றது. நாங்கள் இப்படி ஒரு ஆடுகளத்தை எதிர்பார்க்காததால் எங்களுக்கு மிகவும் ஏமாற்றமாக இருக்கிறது. இது ஆஸ்திரேலியாவின் வழக்கமான தந்திரமாக இருக்கலாம். பரவாயில்லை நாங்கள் இதற்கு தயாராகவே இருக்கிறோம்!” என்று கூறியிருக்கிறார்!
நடந்து முடிந்த பயிற்சி ஆட்டத்தில் பாகிஸ்தான் அணியின் புதிய கேப்டன் ஷான் மசூத் இரட்டை சதம் அடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆஸ்திரேலியா தங்கள் நாட்டுக்கு வரும் அணிகளுக்கு பயிற்சி போட்டிக்கு சாதாரண ஆடுகளங்களை கொடுத்து, பிறகு அதிகாரப்பூர்வ போட்டிகள் சிறப்பான ஆடுகளத்தை வைத்து வெல்வதை ஒரு தந்திரமாகவே செய்து வருகிறது. பாகிஸ்தானுக்கு எதிராகவும் அதையே தற்பொழுது செய்திருக்கிறது!