ஸ்காட்லாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடைபெற்ற மூன்றாவது டி20 போட்டியில் ஆஸ்திரேலியா அணி ஆறு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று டி20 தொடரை முழுமையாக கைப்பற்றியுள்ளது.
இந்த போட்டியில் ஆஸ்திரேலியா அணியின் சார்பாக விளையாடிய கேமரூன் கிரீன் அதிரடியாக விளையாடி 158 ஸ்ட்ரைக் ரேட்டில் ஆஸ்திரேலியா அணி வெற்றிபெற முக்கிய பங்காற்றி இருக்கிறார்.
ஆஸ்திரேலியா அணி ஸ்காட்லாந்தில் சுற்றுப்பயணம் செய்து மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடும் நிலையில், முதல் இரண்டு போட்டிகளிலும் ஆஸ்திரேலியா அணி அதிரடியான வெற்றியைப் பெற்று டி20 தொடரை ஏற்கனவே கைப்பற்றியுள்ள நிலையில் மூன்றாவது டி20 போட்டி இன்று நடைபெற்றது. இரண்டு டி20 போட்டிகள் நடைபெற்ற அதே மைதானத்தில் மூன்றாவது போட்டியில் நடைபெற, டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.
இதன்படி முதலில் பேட்டிங் செய்த ஸ்காட்லாந்து அணி ஆஸ்திரேலியா அணியின் பந்துவீச்சை ஓரளவு சமாளித்து 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 149 ரன்கள் குவித்தது. இதில் மூன்றாவது வரிசையில் களமிறங்கிய ஸ்காட்லாந்து அணி வீரர் ப்ராண்டன் மெக்கலன் 39 பந்துகளில் மூன்று பவுண்டரிகள் மற்றும் மூன்று சிக்ஸர்களோடு 56 ரன்கள் குவித்தார். பிறகு தொடக்க ஆட்டக்காரர் முன்சே 17 பந்துகளில் 2 சிக்சர்களோடு 25 ரன்கள் குவித்தார்.
பந்து வீச்சில் ஆஸ்திரேலியா அணியின் கிரீன் 4 ஓவர்களில் 35 ரன்கள் விட்டுக் கொடுத்து மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினார். பின்னர் ஹார்டி மற்றும் அப்போட் தலா இரண்டு விக்கெட்டுகளும், ஸ்டாய்னிஸ் மற்றும் ஜம்பா ஆகியோர் தலா ஒரு விக்கட்டும் வீழ்த்தினார்கள். அதற்குப் பிறகு வெற்றி இலக்கை நோக்கி ஆஸ்திரேலியா அணி களமிறங்கியது. ஆஸ்திரேலியா அணியின் அதிரடி தொடக்க ஆட்டக்காரர் ட்ராவிஸ் ஹெட் இந்த முறை 12 ரன்களில் வெளியேறினார்.
மற்றொரு இளம் அதிரடி தொடக்க ஆட்டக்காரர் ஜேக் பிரேசர் 0 ரன்னில் வெளியேறினாலும், கேப்டன் மிச்சல் மார்ஸ் அதிரடியாக விளையாடி 23 பந்துகளில் 31 ரன்கள் குவிக்க பந்து வீச்சில் ஏற்கனவே கலக்கிய கேமரூன் கிரீன் இந்த முறை பேட்டிங்கிலும் தனது அதிரடியை தொடர்ந்தார். 39 பந்துகளை மட்டுமே எதிர்கொண்டு இரண்டு பவுண்டரிகள் மற்றும் ஐந்து சிக்சர்களோடு 158 ஸ்ட்ரைக் ரேட்டில் 62 ரன்கள் குவித்து ஆஸ்திரேலியா அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றினார்.
இதையும் படிங்க:ஆஸி பலமான டீம்தான்.. ஆனா இந்தியா இந்த ஒரு விஷயத்துல கிங்னு காட்டிருக்கு – ஷம்சி பேட்டி
இதனால் ஆஸ்திரேலியா அணி 16.1 ஓவரில் 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 153 ரன்கள் குவித்து ஆறு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மூன்றாவது போட்டியிலும் வெற்றி பெற்று தொடரை முழுமையாக கைப்பற்றியது.