இந்திய கிரிக்கெட் அணி கடந்த ஞாயிற்றுக்கிழமை பாகிஸ்தான் அணிக்கு எதிரான சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் லீக் தொடரில் வெற்றி பெற்று அரை இறுதி போட்டிக்கு முதல் அணியாக முன்னேறி உள்ளது.
இந்த சூழ்நிலையில் ஆஸ்திரேலியா கிரிக்கெட் வீரர் பேட் கம்மின்ஸ் இந்திய அணியை விமர்சித்ததாக நேற்று ஒரு செய்தி வைரலாக பரவிய நிலையில் இதுகுறித்து ஆஸ்திரேலியா கேப்டன் மறுத்திருக்கிறார்.
இந்திய அணிக்கு கிடைத்த சலுகை
இந்திய கிரிக்கெட் அணி பாகிஸ்தானில் சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரை விளையாட மறுத்த நிலையில் இந்தியா விளையாடும் போட்டிகள் மட்டும் துபாயில் உள்ள சர்வதேச கிரிக்கெட் மைதானத்திற்கு மாற்றப்பட்டது. இதன் முதல் போட்டியை வங்கதேச அணிக்கு எதிராக விளையாடி இந்திய அணி முதல் போட்டியில் வெற்றி பெற்ற நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பாகிஸ்தான் அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியிலும் வெற்றிகரமாக செயல்பட்டு இரண்டாவது வெற்றியை பதிவு செய்தது.
இதன் மூலமாக அரையிறுதிக்கு முதல் அணியாக தகுதி பெற்ற நிலையில், நேற்று இதுகுறித்து ஆஸ்திரேலியா அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் இந்திய அணி ஒரே மைதானத்தில் விளையாடுவதால் அதற்கு நன்மை அளிக்கும் நிறைய விஷயங்கள் இருக்கின்றன எனவும் மற்ற அணிகளுக்கு இது போல் சலுகைகள் இல்லை, பாகிஸ்தானில் வெவ்வேறு மைதானங்களில் விளையாடுகின்றன என்று கூறினார் என ஏபிசி ஊடகம் வழியாக செய்தி வெளியானது.
மறுத்த ஆஸ்திரேலியா கேப்டன்
இந்த சூழ்நிலையில் ஆஸ்திரேலியா அணியின் கேப்டன் கம்மின்ஸ் தற்போது பதிவிட்டுள்ள ஒரு பதிவில் “நான் கண்டிப்பாக இந்த கருத்தை சொல்லவில்லை” என்று சமூக வலைதளத்தில் பதிவிட்டார். எனவே இதன் உண்மை தன்மையை ஆராய்ந்த நிலையில் இங்கிலாந்து முன்னாள் டெஸ்ட் கிரிக்கெட் வீரர் ஜோனதன் அக்னியூ இந்த கருத்தை கூறியிருக்கிறார் என தகவல்கள் வெளிவந்துள்ளது. எனவே ஏபிசி ஊடகம் அவரது பெயரில் பதிவிடுவதற்கு பதிலாக கம்மின்ஸ் கூறியதாக மாற்றி தவறாக செய்தி வெளியிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க:வெறும் கடமைக்கு மட்டுமே ஆடுனாங்க.. பிசிசிஐ அவங்கள கவனிங்க.. சர்வதேச வீரர்கள் குறித்து மும்பை தேர்வாளர் விமர்சனம்
சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பாகிஸ்தான் அணி இந்திய அணிக்கு எதிராக தோல்வி அடைந்ததன் மூலம் முதல் அணியாக ஐசிசி தொடரில் இருந்து வெளியேறி இருக்கிறது. 29 ஆண்டுகளுக்குப் பிறகு தொடரை நடத்தும் ஒரு அணி ஐந்து நாட்களிலேயே ஐசிசி தொடரை விட்டு வெளியேறியது சோகமான நிகழ்வாக பார்க்கப்படுகிறது. எனவே இந்திய அணி ஏற்கனவே அரை இறுதி வாய்ப்பை பெற்றுள்ள நிலையில் மற்ற மூன்று இடத்திற்கும் கடுமையான போட்டி நிலவு வருகிறது குறிப்பிடத்தக்கது.






