இன்றைய டி20 உலகக் கோப்பை தொடரில் பி பிரிவில் ஆஸ்திரேலியா மற்றும் நமீபியா அணிகள் மோதி கொண்ட போட்டி வெஸ்ட் இண்டிஸ் ஆண்டிகுவா மைதானத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் ஆஸ்திரேலியா அணி அனாயசமாக ஒன்பது விக்கெட் வித்தியாசத்தில் ஐந்தே ஓவரில் போட்டியை முடித்து வென்றது.
ஆஸ்திரேலியா அணி நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரில் முதல் இரண்டு போட்டிகளில் ஓமான் மற்றும் இங்கிலாந்து இரண்டு அணிகளையும் வென்று இருந்தது. இன்றைய போட்டியை வென்றால் அடுத்த சுற்றுக்கு தகுதி பெறலாம் என்ற நிலையில் டாஸ் வென்று முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.
அனுபவத்தில் குறைந்த நமீபியா அணி பலமான ஆஸ்திரேலியா அணியின் பந்து வீச்சுக்கு முன்னால் நிற்க முடியாமல் சீக்கிரத்தில் சரிந்து விழுந்தது. அந்த அணி மொத்தம் 17 ஓவர்கள் மட்டுமே விளையாடி 10 விக்கெட்டுகளையும் இழந்து 72 ரன்கள் மட்டுமே சேர்த்து சுருண்டது.
நமீபியா அணியில் கேப்டன் எராஸ்மஸ் மட்டும் தாக்கு பிடித்து 43 பந்துகளில் 36 ரன்கள் எடுத்தார். இதற்கு அடுத்து துவக்க வீரர் மைக்கேல் வான் லிங்கன் 10 பந்துகளில் 10 ரன்கள் எடுத்தார். இவர்களைத் தவிர அந்த அணியில் யாரும் ஒற்றை இலக்கத்தைத் தாண்டவில்லை. ஆஸ்திரேலியா பந்துவீச்சில் ஆடம் ஜாம்பா நான்கு விக்கெட் கைப்பற்றினார்.
இதைத்தொடர்ந்து இலக்கை நோக்கி விளையாடிய ஆஸ்திரேலியா அணி 5.4 ஓவரில் இலக்கை ஒரு விக்கெட்டை மட்டும் இழந்து அனாயசமாக எட்டி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. டேவிட் வார்னர் 8 பந்தில் 20 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். டிராவிஸ் ஹெட் 17 பந்தில் 34 ரன்கள், கேப்டன் மிட்சல் மார்ஸ் 9 பந்தில் 18 ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்காமல் களத்தில் இருந்தார்கள்.
இதையும் படிங்க : அவர்களைப் பார்த்து எனக்கு பயமில்லை.. நான் குழந்தையாக வளரும்போதே இதுதான் என் ஆசை.. ஆரோன் ஜோன்ஸ் ஓபன் டாக்
இந்த வெற்றியின் மூலம் பி பிரிவில் ஆஸ்திரேலியா அணி முதல் அணியாக அடுத்த சுற்றுக்குத் தகுதி பெற்றது. இதற்கு அடுத்து இங்கிலாந்து அணி தன்னுடைய கடைசி இரண்டு போட்டிகளையும் பெரிய ரன் ரேட்டில் வென்றும், மேலும் ஸ்காட்லாந்து அணி ஆஸ்திரேலியா அணியிடம் படுதோல்வியை சந்திக்க வேண்டும் என்கின்ற கட்டாயம் இருக்கிறது. இல்லையென்றால் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து அணி முதல் சுற்றோடு வெளியேறிவிடும்.