கம்மின்ஸ் ஹாட்ரிக்.. டி20 உ.கோ வரலாற்றில் ஆஸி புது உலகசாதனை.. பங்களாதேஷ் பரிதாப தோல்வி

0
402
Cummins

இன்று டி20 உலக கோப்பை தொடரில் வெஸ்ட் இண்டீஸ் ஆன்டிகுவா மைதானத்தில் ஆஸ்திரேலியா மற்றும் பங்களாதேஷ அணிகள் மோதிக் கொண்ட போட்டி நடைபெற்றது. மழையால் தடைப்பட்ட இந்த போட்டியில் பங்களாதேஷ் அணியை வெகு எளிதாக ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது.

இன்றைய போட்டிக்கான டாசில் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. பங்களாதேஷ் பேட்டிங் வரிசையில் அனுபவ வீரர்களிடமிருந்து பெரிய ரன் பங்களிப்பு எதுவும் வரவில்லை. சாகிப் அல் ஹசன், லிட்டன் தாஸ் மற்றும் மகமதுல்லா என மூத்த வீரர்கள் எல்லோரும் ஏமாற்றினார்கள்.

- Advertisement -

இந்த நிலையில் இளம் வீரர்களான கேப்டன் நஜிபுல் சாந்தோ 36 பந்தில் 41 ரன்கள், தவ்ஹீத் ஹ்ரிடாய் 28 பந்தில் 40 ரன்கள் எடுத்தார்கள். பங்களாதேஷ் அணி 20 ஓவர்களில் எட்டு விக்கெட் இழப்புக்கு 140 ரன்கள் எடுத்தது. ஆஸ்திரேலியா தரப்பில் பாட் கம்மின்ஸ் 3, ஆடம் ஜாம்பா 2 விக்கெட் கைப்பற்றினார்கள்.

இந்தப் போட்டியில் 18வது ஓவரை வீசிய பாட் கம்மின்ஸ், அந்த ஓவரின் ஐந்தாவது மற்றும் கடைசிப் பந்தில் மகமதுல்லா மற்றும் மெகதி ஹசன் விக்கெட்டை அடுத்தடுத்து கைப்பற்றினார். இதற்கு அடுத்து இருபதாவது ஓவரை வீசவந்த கம்மின்ஸ் அந்த ஓவரின் முதல் பந்தில் தவ்ஹீத் ஹ்ரிடாய் விக்கெட்டை கைப்பற்றி ஹாட்ரிக் சாதனை படைத்தார். டி20 உலகக்கோப்பை தொடரில் ஹாட்ரிக் சாதனை படைத்த ஏழாவது பந்துவீச்சாளர் ஆனார். பிரட் லீக்கு அடுத்து இரண்டாவது ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர் ஆனார்.

- Advertisement -

இதற்கு அடுத்து ஆஸ்திரேலியா அணி விளையாடும் பொழுது மழை குறுக்கிட்டது. அந்த அணிக்கு டிராவிஸ் ஹெட் 21 பந்தில் 31 ரன்கள், கேப்டன் மிட்சல் மார்ஸ் 6 பந்தில் 1 ரன் எடுத்து ஆட்டம் இழந்தார்கள். டேவிட் வார்னர் 35 பந்தில் 53, கிளன் மேக்ஸ்வெல் 6 பந்தில் 16 ரன்கள் எடுக்க, ஆஸ்திரேலியா அணி 11.2 ஓவரில் இரண்டு விக்கெட் இழப்புக்கு 100 ரன்கள் எடுத்திருந்தது. அப்பொழுது மீண்டும் மழை பெய்ய ஆரம்பித்ததால், டக்வொர்த் லீவிஸ் விதிப்படி ஆஸ்திரேலிய அணி 28 ரன்கள் வித்தியாசத்தில் வென்றதாக அறிவிக்கப்பட்டது.

இதையும் படிங்க : பும்ரா ரிசர்வ் பேங்க் மாதிரி.. அவர் செய்கிற இந்த வேலையை உலகத்தில் வேற யாராலயுமே செய்ய முடியாது – இர்பான் பதான் பேட்டி

டி20 உலகக்கோப்பை வரலாற்றில் 2010 முதல் 2012 ஆம் ஆண்டு வரை இங்கிலாந்து அணி தொடர்ந்து ஏழு போட்டிகளை வென்றது இந்த வகையில் சாதனையாக இருந்தது. தற்பொழுது ஆஸ்திரேலியா அணி 2022 டி20 உலகக்கோப்பை முதல் தற்போதைய உலகக்கோப்பை வரை எட்டு போட்டிகளை வென்று இந்த சாதனையை முறியடித்து புதிய உலகச்சாதனை படைத்திருக்கிறது.

- Advertisement -