AUS vs SA.. கடைசி 15 ஓவர்.. 221 ரன்.. தென் ஆப்பிரிக்கா ரெகார்ட்.. 34.5 ஓவர்களில் அரண்டு போன ஆஸ்திரேலியா!

0
21870
Klasen

நேற்று தென் ஆப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடந்த போட்டியில், இரண்டு முக்கியமான உலகச்சாதனைகள் படைக்கப்பட்டு இருக்கிறது.

தற்பொழுது 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக அவர்கள் நாட்டில் ஆஸ்திரேலியா அணி விளையாடுகிறது. முதலில் நடைபெற்ற மூன்று போட்டிகளில் முதல் இரண்டு போட்டிகளில் ஆஸ்திரேலியா வெல்ல, தென் ஆப்பிரிக்கா மூன்றாவது போட்டியை வென்று இருந்தது.

- Advertisement -

இந்த நிலையில் இன்றைய போட்டிக்கான டாசில் வென்ற ஆஸ்திரேலியா பந்துவீச்சை தேர்ந்தெடுத்தது. தென் ஆப்பிரிக்க அணிக்கு குயின் டி காக் 45, ரீசா ஹென்றிக்ஸ் 28, மார்க்ரம் 8, ராசி வாண்டர் டேசன் 62 என ரன்கள் எடுத்து வெளியேறினார்கள்.

இதற்கு அடுத்து 34.4 ஓவர்களில் தென் ஆப்பிரிக்க அணி நான்கு விக்கெட் இழப்புக்கு 194 ரன்கள் எடுத்திருந்தபொழுது, களத்தில் இருந்த ஹென்றி கிளாசன் உடன் டேவிட் மில்லர் ஜோடி சேர்ந்தார். இதற்குப் பின்பு ஆட்டத்தில் அனல் பறக்க ஆரம்பித்தது. இருவருமே ஆஸ்திரேலியா பந்துவீச்சை நொறுக்கி தள்ளினார்கள்.

மிகச் சிறப்பாக விளையாடிய ஹென்றி கிளாசன் வெறும் 83 பந்துகளில் 13 பவுண்டரி மற்றும் 13 சிக்ஸர்கள் உடன் 174 ரன்கள் எடுத்து கடைசி ஓவரின் கடைசிப் பந்தில் ஆட்டம் இழந்தார். இவருக்கு துணையாய் நின்ற டேவிட் மில்லரும் அதிரடியாக 45 பந்துகளில் ஆறு பவுண்டரி மற்றும் ஐந்து சிக்ஸர்கள் உடன் 82 ரன்கள் எடுத்தார். 50 ஓவர்கள் முடிவில் 10 ஆப்பிரிக்க அணி ஐந்து விக்கெட் இழப்புக்கு 416 ரன்கள் குவித்தது. இந்த ஜோடி 15.2 ஓவரில் 222 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது.

- Advertisement -

இந்தப் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி நானூறு ரன்களை கடந்ததின் மூலம், அதிக முறை ஒருநாள் கிரிக்கெட்டில் 400 ரன்களை அடித்த அணி என்று, ஏழாவது முறையாக அடித்து உலகச்சாதனை படைத்திருக்கிறது.

அடுத்து ஆடம் ஜாம்பா பந்துவீச்சில் பத்து ஓவருக்கு 113 ரன்கள் அடித்து, அவரை ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் தந்த பந்துவீச்சாளர் என்ற மோசமான உலகச் சாதனையையும் தென் ஆப்பிரிக்கா செய்ய வைத்திருக்கிறது.

மிகப்பெரிய இலக்கை நோக்கி களம் இறங்கிய ஆஸ்திரேலியா அணிக்கு, அந்த அணியின் விக்கெட் கீப்பர் அலெக்ஸ் கேரி 77 பந்துகளில் 99 ரன்கள் எடுத்தார். மற்ற யாரும் சரிவர ஒத்துழைப்பு தராததால், ஆஸ்திரேலிய அணி 34.5 ஓவரில் 252 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. தென் ஆப்பிரிக்க தரப்பில் லுங்கி நிகிடி நான்கு விக்கெட் மற்றும் ரபாடா மூன்று விக்கெட் கைப்பற்றினார்கள்.

இந்தப் போட்டிக்குப் பிறகு ஐந்து போட்டிகள் கொண்ட, இந்த ஒருநாள் கிரிக்கெட் தொடர், தற்பொழுது 2-2 என சமநிலையில் இருக்கிறது. தொடரின் ஐந்தாவது மற்றும் கடைசிப் போட்டி, தொடரை யாருக்கு? என்று நிர்ணயிக்கும் போட்டியாக அமைந்திருக்கிறது!