சீனியர் வீரர்களை நம்பியது போதும்.. டி20க்கள் ஆடாத டெஸ்டில் மட்டுமே கவனம் செலுத்தும் வீரர்கள் வரவேண்டும்; ஸ்மித், லபுஜானே, கவாஜா டெஸ்டில் மட்டுமே ஆடுகிறார்கள் – முன்னாள் வீரர் கருத்து!

0
317

“ஸ்மித், லபுஜானே போன்றவர்கள் டி20 போட்டிகளில் ஆடுவதில்லை. ஆனால் அதுபோல இந்திய அணியில் நடப்பதில்லை. டெஸ்டில் கவனம் செலுத்தும் வீரர்கள் வரவேண்டும்.” என்று கருத்து தெரிவித்திருக்கிறார் சஞ்சய் மஞ்ரேக்கர்.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலுக்கு பிறகு இந்திய அணியில் பல்வேறு மாற்றங்களை கொண்டு வர வேண்டிய நேரம் வந்துவிட்டது என்று பலரும் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். ஏனெனில் அவ்வளவு தூரம் சிறப்பாக செயல்பட்டு பைனல் வரை வந்த இந்திய அணி, பைனலில் படுமோசமாக செயல்பட்டு 209 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அணியிடம் தோல்வியை தழுவியது.

- Advertisement -

மேலும் ஐபிஎல் டி20 தொடரை முடித்துவிட்டு நேரடியாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலுக்கு வந்திருந்ததால், சில வீரர்களால் டெஸ்ட் போட்டிகளுக்கு ஏற்றவாறு உடனடியாக மாற்றிக் கொள்ள முடியவில்லை என்று கருத்துக்கள் கூறப்படுகிறது.

தொடர்ந்து ரோகித் சர்மாவின் கேப்டன் பொறுப்பு மற்றும் நம்பர் ஒன் டெஸ்ட் பௌலர் அஸ்வின் பயன்படுத்தப்படாதது என மற்ற சில விஷயங்களும் தோல்விக்கான காரணங்களாக கூறப்பட்டு வரும் நிலையில், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் மூன்றாவது சீசனில் இந்திய அணியில் சில மாற்றங்களை கொண்டு வந்து இளம் வீரர்களை பயன்படுத்த வேண்டும் என்றும் பேசப்பட்டு வருகிறது.

முன்னணி வீரர்கள் ரிஷப் பண்ட், கேஎல் ராகுல், ஸ்ரேயாஸ் ஐயர் போன்றோர் காயத்தில் இருப்பதால் அந்த இடங்களுக்கு சீனியர் வீரர்களை பயன்படுத்துவதை விட உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக செயல்பட்ட வீரர்களை பயன்படுத்தலாம். மேலும் டெஸ்ட் போட்டிகளுக்கு என்று பிரத்தியேக வீரர்கள் கொண்ட அணியை உருவாக்கலாம்.

- Advertisement -

ஏனெனில் டி20 தொடரை முடித்துவிட்டு உடனடியாக டெஸ்ட் போட்டிக்கு ஏற்றவாறு சில வீரர்களால் உடனடியாக மாறமுடியவில்லை. இதனால்தான் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலில் நாம் தோற்றோம் என்று கருத்தை முன் வைத்திருக்கிறார் முன்னாள் இந்திய வீரர் சஞ்சய் மஞ்ரேக்கர்.

“ஆஸ்திரேலியா அணியில் ஸ்மித், லபுஜானே, கவாஜா போன்றோர் டி20 போட்டிகளில் விளையாடுவதில்லை. ஆகையால் அவர்களால் டெஸ்ட் போட்டிகளில் கவனம் செலுத்த முடிகிறது, ஜொலிக்க முடிகிறது. போட்டி எப்போது நடைபெறுகிறதோ, அதற்குள் நன்றாக தயாராகி வரமுடிகிறது.

ஆனால் இந்திய அணியில் டி20 மற்றும் டெஸ்ட் போட்டிகளில் விளையாட கூடிய வீரர்கள் இருக்கின்றனர். அவர்களால் உடனடியாக சர்வதேச டெஸ்ட் போட்டிகளுக்கு ஏற்றவாறு மாற்றிக்கொள்ள முடியவில்லை. சில நாட்கள் எடுக்கிறது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலில் நேர்ந்த தவறுகள் மூலம் தெளிவாக பார்க்க முடிந்தது.

உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டு வாய்ப்புகளுக்காக காத்திருக்கும் இளம் வீரர்கள் பலர் தயாராக இருக்கின்றனர். டெஸ்ட் போட்டிகளில் தொடர்ந்து அவர்களை பயன்படுத்தி பிரத்தியேக அணிகளை டெஸ்ட் போட்டிகளுக்கு என்று உருவாக்கலாம்.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் மூன்றாவது சைக்கிள் துவங்கவிருக்கிறது. வருகிற வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கே இது போன்ற மாற்றத்தை கொண்டு வரலாம். குறைந்தபட்சம் 3 இளம் பேட்ஸ்மேன்கள் மற்றும் மூன்று வேகப்பந்து வீச்சாளர்கள் பயன்படுத்தப்பட்டு கண்டறிய வேண்டும்.” என்று பேசியுள்ளார் சஞ்சய் மஞ்ரேக்கர்.