6 அணிகள் பங்கேற்கும் ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடர் இடமாற்றம் ! அறிவிப்பு வெளியானது !

0
2789
Asia Cup

ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடர் ஆசிய கண்டத்தில் கிரிக்கெட் விளையாடும் நாடுகளைக் கொண்டு 1984ஆம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வருகிறது. இதில் இந்திய அணி ஏழுமுறை கோப்பையை வென்று, ஆசியக் கோப்பையை அதிகம் வென்ற அணியாக இருக்கிறது!

1984ஆம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு ஆசியக் கோப்பை தொடர், 50 ஓவர் போட்டிகளாகவே நடைபெற்று வந்தது. ஆனால் 2018ஆம் ஆண்டு முதல் 20 ஓவர் போட்டிகளாக நடத்த திட்டமிட்டு நடத்தப்பட்டது. இனி வருங்காலங்களிலும் ஆசியக் கோப்பை 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தொடராகத்தான் நடைபெறும். பழைய முறையில் 50 ஓவருக்கு திரும்ப வாய்ப்பில்லை.

- Advertisement -

ஆசியக் கோப்பை தொடர் கடைசியாக 2018ஆம் ஆண்டு நடைபெற்றது. அடுத்த ஆசியக் கோப்பை தொடர் இலங்கையில் நடைபெறுமென அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் நடுவில் உலகம் தழுவிய கோவிட் தொற்றால் தொடர் நடைபெறவில்லை.

சில வாரங்களுக்கு முன்பு இந்த வருடம் ஆசியக்கோப்பை நடைபெறும் எனவும், ஆசியக்கோப்பை தொடர் இலங்கையில் நடைபெறும் எனவும், ஆறு நாடுகள் கலந்துகொள்கிறது எனவும், தகுதி சுற்றுப்போட்டிகள் முடிந்து, முதல் போட்டி ஆகஸ்ட் 27ஆம் தேதியும், இந்தியா-பாகிஸ்தான் மோதும் போட்டி ஆகஸ்ட் 28ஆம் தேதி நடைபெறும் எனவும் ஒரு தகவல் உலாவந்தது.

ஆனால் தற்போது ஆசியக்கோப்பை தொடர் இலங்கையில் நடைபெறாது என்கிற அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி இருக்கிறது. தற்போது இலங்கையில் நிலவி வரும் கடும் பொருளாதாரச் சரிவால், அரசுக்கு எதிராக மக்களின் புரட்சி நடந்து வருகிறது. ஆனால் மக்கள் மிகத் தெளிவாக அரசுக்கு எதிராக மட்டுமே தங்களின் போராட்டங்களை அமைத்துக்கொண்டனர். தங்கள் நாட்டில் கிரிக்கெட் விளையாடவோ இல்லை விளையாட வரும் அணிகளுக்கு எதிராகவோ அவர்கள் திரும்பவில்லை.மாறாக ஆதரிக்கவே செய்தனர். இதனால் ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் செய்து சமீபத்தில் மூன்று வடிவிலான கிரிக்கெட் தொடரிலும் விளையாடியது. தற்போது பாகிஸ்தான் சுற்றுப்பயணம் செய்து டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது.

- Advertisement -

இலங்கையில் கிரிக்கெட் தொடர்கள் நடத்தப்பட்டு வந்தாலும், தற்போது ஆசியக்கோப்பை தொடர் யு.ஏ.இ-க்கு மாற்றப்பட்டு இருக்கிறது. ஆகஸ்ட் 26 முதல் செப்டம்பர் 13ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான் என ஐந்து அணிகள் நேரடியாக பங்கேற்க, ஒரு அணி தகுதி சுற்றின் மூலம் கலந்துகொள்கிறது!