ஆசிய கோப்பை இரண்டாவது சுற்று.. இந்தியா பாகிஸ்தான் போட்டியில் மாற்றம்.. ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி.. முழு விபரம் இதோ!

0
7839
ICT

கிரிக்கெட்டைப் பொறுத்தவரை இந்தியா பாகிஸ்தான் அணிகள் தரவரிசையில் எந்த இடத்தில் இருந்தாலும், இந்த இரு அணிகள் மோதிக் கொள்ளும் போட்டிக்கு, இரு நாட்டு ரசிகர்களை தாண்டி உலக அளவில் பெரிய எதிர்பார்ப்பு இருக்கும். இரண்டு அணி வீரர்களும் தங்களுடைய அதிகபட்சத்தை களத்தில் வெளிப்படுத்துவார்கள்!

இப்படியான இரண்டு அணிகள் ஒரு தசாப்தத்திற்கு மேல் இரு நாடுகளுக்கு இடையேயான தனிப்பட்ட கிரிக்கெட் தொடர்களில் விளையாடாமல் இருந்து வருகிறது. இது இரு நாட்டு கிரிக்கெட் ரசிகர்களுக்குமே மிகவும் கவலை அளிக்கும் விஷயமாக இருக்கிறது!

- Advertisement -

இந்த நிலையில் நடப்பு ஆசிய கோப்பை ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் இரண்டு அணிகளும் குறைந்தபட்சம் இரண்டு போட்டிகளிலும், அதிகபட்சம் மூன்று போட்டிகளிலும் மோதிக் கொள்வதற்கான வாய்ப்புகள் அமைந்தது. இதன் காரணமாக இரு நாட்டு ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் இருந்தனர்.

இந்த நிலையில் ஆசியக் கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இலங்கையில் நடத்தப்பட்ட ஒரு பகுதி ஆட்டங்கள் தொடர்ந்து பெய்து வரும் மழையால் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகிறது. இதன் காரணமாக முதல் சுற்றில் இந்தியா பாகிஸ்தான் மோதிய போட்டியும் பாதிக்கப்பட்டது. இது ரசிகர்களை மிகுந்த ஏமாற்றத்திற்கு உள்ளாக்கியது.

தற்பொழுது இரண்டாவது சுற்று போட்டிகள் இலங்கை கொழும்பு மைதானத்தில் நடக்கிறது. ஆனால் இங்கும் தொடர்ச்சியான மழைக்கான வாய்ப்பு இருப்பதாக கூறப்பட, ரசிகர்கள் ஏமாற்றத்தை கடந்து கோபத்தின் உச்சிக்கு சென்று விட்டார்கள். மேலும் இது ஆசிய கிரிக்கெட் கவுன்சிலுக்கு வணிக ரீதியாகவும் பெரிய இழப்பை தரக்கூடியது.

- Advertisement -

எனவே ஆசிய கிரிக்கெட் கவுன்சிலுக்கு, இந்தியா பாகிஸ்தான் போட்டியை கட்டாயம் முழுமையாக நடத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு இருக்கிறது. அதேவேளையில் போட்டியை வேறு நாட்டுக்கும் இந்த நேரத்தில் மாற்றவும் முடியாது. அதே சமயத்தில் இலங்கைக்குள் எங்கு மாற்றினாலும் மழையின் ஆபத்து இருக்கவே செய்கிறது.

இந்த நிலையில் ஆசிய கிரிக்கெட் கவுன்சில் இந்த விஷயத்தில் வேறு விதமான ஒரு முடிவுக்கு வந்திருக்கிறது. அதாவது இந்தியா பாகிஸ்தான் மோதிக்கொள்ளும் இரண்டாவது சுற்றுப் போட்டி செப்டம்பர் 10ஆம் தேதி கொழும்பு மைதானத்தில் நடக்கிறது. இந்தப் போட்டி அன்றைய நாளில் மழையால் பாதிக்கப்பட்டால், எந்த இடத்தில், எத்தனை ஓவர்களில் மழையால் பாதிக்கப்பட்டதோ, அங்கிருந்து அப்படியே அடுத்த நாள் செப்டம்பர் 11ஆம் தேதி நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

அதாவது இந்தியா பாகிஸ்தான் போட்டிக்கு ரிசர்வ் நாள் அறிவிக்கப்பட்டிருக்கிறது. தற்பொழுது இரண்டு நாளிலும் சேர்த்து இந்தியா பாகிஸ்தான் போட்டி முழுமையாக நடைபெற்றால் போதும் என்று ரசிகர்களும் சமூக வலைதளத்தில் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகிறார்கள். அதே சமயத்தில் இரண்டு நாளும் மழை போட்டியை நடக்க விடுமா? என்பதும் கேள்விக்குறியாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது!