இந்திய கிரிக்கெட்டில் டெஸ்ட் அணியில் சுழற் பந்துவீச்சாளராக திகழும் தமிழகத்தை சேர்ந்த ரவிச்சந்திரன் அஸ்வின், தற்போது புத்தகம் எழுதி வெளியிடுவதில் ஆர்வமாக இருக்கிறார்.
இந்திய அணியின் வெற்றிகரமான கேப்டனாக விளங்கிய மகேந்திர சிங் தோனி ஐசிசி தொடர்களில் அனைத்து கோப்பைகளையும் வென்று கொடுத்த கேப்டன் என்ற பெருமையும் இவருக்கு உண்டு.
கேப்டன் கூல் என்று அனைவராலும் அழைக்கப்படும் மகேந்திர சிங் தோனி அவ்வளவு சீக்கிரம் தனது பொறுமையை இழக்க மாட்டார். இந்த நிலையில் 2011ஆம் ஆண்டு உலக கோப்பைக்கு முன்பாக இந்தியா தென் ஆப்பிரிக்கா தொடர் சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது அணியில் இருந்த ஸ்ரீசாந்த் மீது தோனி கோபப்பட்டது குறித்து சில முக்கிய கருத்துக்களை அஸ்வின் புத்தகத்தில் எழுதி இருக்கிறார்.
இதுகுறித்து அவர் கூறும் பொழுது “தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான போட்டியின் போது நானும் ஸ்ரீ சாந்த்தும் விளையாடும் பிளேயிங் லெவனில் இல்லை. மகேந்திர சிங் தோனி விளையாடும் போது தண்ணீர் அதிகமாக குடிப்பார்.
அந்த சமயத்தில் இரண்டு ஓவர்கள் கழித்து நான் தண்ணீர் கொடுக்கச் சென்றபோது தோனி, ஸ்ரீசாந்த் எங்கே? என்று என்னிடம் கேட்க நான் ட்ரெஸ்ஸிங் ரூமிற்குள் இருக்கிறார் என்று சொன்னேன். உடனே தோனி அவரை கீழே வந்து வீரர்களுடன் அமரச் சொல் என்று கூறினார்.
நானும் உடனே மேலே இருந்த முரளி விஜயிடம் ஸ்ரீ சாந்தை கீழே அனுப்பும்படி சைகை காட்ட, உடனே விஜய் நான் சொல்ல முடியாது, நீ வேண்டுமானால் சொல் என்று கூறினார். உடனே நான் ஸ்ரீ சாந்திடம் தோனி உங்களை கீழே வரச் சொல்கிறார் என்று கூறிவிட்டு தோனியிடம் ஹெல்மட்டை கொடுக்க மீண்டும் சென்றேன்.
அப்போது ஸ்ரீசாந்த் வராததை கவனித்த தோனி திரும்பவும் அவர் எங்கே? என்று கோபமாக கேட்டார். நான் அவர் மசாஜ் செய்து கொண்டிருக்கிறார் வந்து விடுவார் என்று கூறினேன். தோனி பின்னர் அமைதியாக என்னிடம் நீங்கள் மேலாளரிடம் சென்று, ஸ்ரீசாந்த்திற்கு இங்கு இருப்பதற்கு விருப்பமில்லை எனவே டிக்கெட்டை புக் செய்து நாளை அவரை இந்தியாவிற்கு அனுப்பி விடுங்கள் என்று சொல்லச் சொல்லி என்னிடம் கூறினார். நான் திகைத்துப் போய் நின்றேன். அதற்கு முன்னர் நான் தோனியை அப்படி பார்த்தது இல்லை. நான் திகைத்து நின்றதை பார்த்த தோனி நான் சொன்னது உங்களுக்கு புரியவில்லையா? இல்லை ஆங்கிலம் புரியாதா? என்று கேட்டார்.
இதையும் படிங்க:4-1 இருக்கட்டுமே.. எங்க இங்கிலாந்து பாஸ்பாலை இந்தியாவால் எதுவுமே செய்ய முடியல.. இதான் காரணம் – ஹார்மிஷன் பேட்டி
இந்த சூழ்நிலையில் உடனடியாக கீழே வந்த ஸ்ரீசாந்த் அடுத்த ட்ரிங்ஸ் பிரேக்கில் தோனிக்கு சென்று தண்ணீர் கொடுக்க, உடனே தோனி என்னை கூப்பிட்டு நீங்கள் மேலாளரிடம் சொன்னீர்களா? இல்லையா? என்று கேட்டார். நான் அப்போது எதுவும் சொல்ல முடியாமல் திகைத்துப் போய் சிரிக்க வேண்டிய சூழ்நிலையில் சிக்கினேன். ஆனால் அதற்குப் பின்னர் எல்லாம் சமூகமாக முடிந்தது” என்று கூறினார்.