வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டிக்கு முன்னதாக, இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில்லின் கேப்டன்ஷிப் மற்றும் பேட்டிங் திறமை குறித்து முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் பாராட்டிப் பேசியுள்ளார்.
முதல் ஒருநாள் போட்டியில் 110 ரன்கள் குவித்து இந்திய அணியை வெற்றி பெறச் செய்த சுப்மன் கில், கேப்டனாகவும் பேட்டராகவும் தனது மிகச் சிறந்த ஃபார்மைத் தொடர்ந்து வெளிப்படுத்தி வருகிறார்.
ஐபிஎல் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணியை வழிநடத்திய அனுபவம், இந்திய அணியை வழிநடத்துவதிலும் அவருக்குப் பெரிதும் உதவி புரிந்து வருகிறது.
சுப்மன் கில்லின் கேப்டன்ஷிப் குறித்து அஸ்வின் பேசும்போது, “அவரது கேப்டன்ஷிப் நாளுக்கு நாள் சிறப்படைந்து வருகிறது. தொடக்கத்தில் எனது மனதிற்குள் சில சந்தேகங்கள் இருந்தன, ஆனால் நாம் அவரைப் பாராட்டியே ஆக வேண்டும். அவரது கேப்டன்ஷிப் உயர்ந்துள்ள விதம் எனக்கு மகிழ்ச்சியையும் ஆச்சரியத்தையும் அளிக்கிறது. இந்த ஆண்டு ஜிடி அணியையும் சிறப்பாக வழிநடத்தினார், தற்போது இந்திய அணியிலும் அதை நிரூபித்து வருகிறார், இது ஒரு சிறந்த குணம்” என்று கூறி இருக்கிறார்.
மேலும் கில்லின் பேட்டிங் குறித்துப் பேசிய அஸ்வின், “அடுத்த தலைமுறை இந்திய பேட்டர்களில் சுப்மன் கில் ஒரு பூரணமான பேட்டர். அவருக்கும் மற்றவர்களுக்கும் இடையே கணிசமான வித்தியாசம் உள்ளது, அவர் அந்த அளவுக்கு சிறந்தவர். அவருக்குப் போதுமான போட்டிகள் கிடைத்தால் எதிர்காலத்தில் விராட் கோலிக்கு அருகில் வருவார் என்று நினைக்கிறேன். துரதிர்ஷ்டவசமாக ஒருநாள் கிரிக்கெட்டின் எதிர்காலம் சற்று சந்தேகத்தில் உள்ளது. ஒருநாள் கிரிக்கெட் அவருக்கு மிகவும் பொருந்தும், ஆனால் விராட் விளையாடிய அளவுக்கு கில்லுக்குப் போட்டிகள் கிடைக்காமல் போகலாம், அது துரதிர்ஷ்டவசமானது” என்று கூறி இருக்கிறார்.






