ரவிச்சந்திரன் அஸ்வின் நேற்று எழுதிய ஒரு ட்வீட் பலராலும் பரபரப்பாக விவாதிக்கப்பட்டது. ஏனென்றால் அது ரோகித் சர்மாவை குறித்து விமர்சிக்கப்பட்டதாக எடுத்துக் கொள்ளப்பட்டது. இந்த நிலையில் அது குறித்து ரவிச்சந்திரன் அஸ்வின் விளக்கம் அளித்திருக்கிறார்.
தற்போது நடைபெற்று வரும் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஒரு பேட்ஸ்மேன் ஆக மட்டும் இல்லாமல் கேப்டனாகவும் ரோகித் சர்மா மிகவும் தடுமாறி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே அவரது சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வந்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.
ரவிச்சந்திரன் அஸ்வின் ஆஸ்திரேலிய தொடரின் மூன்றாவது போட்டியின் கடைசி நாளில் தான் தன்னுடைய ஓய்வு முடிவை எடுத்ததாக கூறியிருந்தார். அதற்கு முன்பாக பேசியிருந்த இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா முதல் போட்டியிலேயே அவர் இந்த முடிவுக்கு வந்துவிட்டதாகவும் தாமே அவரை சமாதானப்படுத்தி இரண்டாவது போட்டியில் விளையாட வைத்ததாகவும் கூறியிருந்தார்.
இது அஸ்வின் ஓய்வு பெற்றது குறித்து பல்வேறு யூகங்களை கிளப்பி விட்டது. மேலும் இந்த தொடரில் தனிப்பட்ட முறையில் பேட்ஸ்மேன் மற்றும் கேப்டனாக ரோகித் சர்மா செயல்பாடு மிகவும் சுமாராக இருந்து வருகிறது. ஒட்டுமொத்தமாக அவருக்கு கிரிக்கெட் வாழ்க்கையில் மிகவும் கடினமான காலகட்டமாக இது அமைந்திருக்கிறது.
இந்த நிலையில் ரவிச்சந்திரன் அஸ்வின் நேற்று ஒரு பதிவை வெளியிட்டு இருந்தார். அதில் இந்த பதிவு தனியாக வீரர்களுக்கு ரசிகர் மன்றத்தை வைத்திருப்பவர்களுக்கு கிடையாது என்று குறிப்பிட்டிருந்தார். அதில் இணைப்பாக “கடினமான காலத்தில் சிறந்தவர்கள் தங்களது உறுதியை காட்டுகிறார்கள்” என்று எழுதி இருந்தார். இது ரோகித் சர்மாவை குறிவைத்த விமர்சனமாக பலராலும் பார்க்கப்பட்டது.
இதையும் படிங்க : WTC பைனல்.. நான் இதுக்கு மன்னிப்பு கேட்க போவதில்லை – தென் ஆப்பிரிக்க கோச் கான்ராட் பேட்டி
இதுகுறித்து விளக்கம் அளித்திருக்கும் ரவிச்சந்திரன் அஸ்வின் கூறும் பொழுது “மக்கள் அதை தவறாக புரிந்து கொண்டிருக்கிறார்கள். நான் ஜெயஸ்வால் நேற்று கடினமான நேரத்தில் சிறப்பாக விளையாடியது குறித்தே பதிவு செய்திருந்தேன்” என்று கூறியிருக்கிறார்.