முதல் முறையாக மும்பை இந்தியன்ஸ் அணிக்கு அறிமுகமாகி முதல் ஐபிஎல் போட்டியில் விளையாடிய அர்ஜுன் டெண்டுல்கருக்கு தந்தை சச்சின் டெண்டுல்கர் ட்விட்டர் பக்கத்தில் உருக்கமான வாழ்த்து செய்தியை பதிவிட்டு இருக்கிறார்.
ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜுன் டெண்டுல்கர், இடதுகை வேகப்பந்துவீச்சாளர் மற்றும் கீழ் வரிசையில் களமிறங்கக்கூடிய பேட்ஸ்மேன். 2021ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல்முறையாக மும்பை இந்தியன்ஸ் அணிக்காக எடுக்கப்பட்ட அர்ஜுன், துரதிஷ்டவசமாக காயம் ஏற்பட்டதால் அந்த சீசனில் இருந்து மொத்தமாக விலகினார்.
2022ஆம் ஆண்டு நடந்த ஏலத்தில் மீண்டும் மும்பை இந்தியன் அணிக்கு எடுக்கப்பட்டார். ஆனால் சென்ற ஆண்டு இவருக்கு விளையாட வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இந்நிலையில் இந்த சீசனில் முதல் மூன்று போட்டிகளில் அர்ஜுன் டெண்டுல்கருக்கு வாய்ப்புகள் கிடைக்கவில்லை.
கடைசியாக மும்பையில் நடைபெற்ற கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் அறிமுகம் ஆகினார். அர்ஜுன், இப்போட்டியில் நன்றாக பந்துவீசினாலும் இரண்டு ஓவர்களில் 17 ரன்கள் விட்டுக் கொடுத்து விக்கெட் எதுவும் எடுக்கவில்லை.
இந்த சீசனில் முதல்முறையாக விளையாட வைக்கப்பட்டு இருக்கிறார். இதற்கு பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர். தந்தை என்கிற முறையில் சச்சின் டெண்டுல்கர் உருக்கமான வாழ்த்து செய்தியை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறார்.
“அர்ஜுன் டெண்டுல்கர், இன்று கிரிக்கெட்டில் இன்னொரு முக்கியமான அடியை எடுத்து வைத்திருக்கிறார். கிரிக்கெட்டிற்கு உரிய மரியாதையை நீ கொடுத்தால், பதிலுக்கு கிரிக்கெட்டும் உனக்கு அனைத்தையும் கொடுக்கும். உன்னுடைய தந்தையாக மற்றும் கிரிக்கெட்டை நேசிக்கக்கூடிய ஒருவனாக இதை நீ செய்வாய் என்று நம்புகிறேன்.
இந்த இடத்தை அடைவதற்கு நீ எவ்வளவு உழைத்திருக்கிறாய் என்பதை நான் பார்த்திருக்கிறேன். அதே உழைப்பு இன்னும் தொடர்ந்து செய்வாய் என்றும் நினைக்கிறேன். உன்னுடைய கிரிக்கெட் பயணத்தில் இது ஆரம்பம் தான். இன்னும் நிறைய இருக்கின்றது.” என்று பதிவிட்டு இருந்தார்.






