கடந்த முறை போலவே முதல் அணியாக பிளே ஆப் சுற்றுக்குள் நுழைந்தது குஜராத் ; சிஎஸ்கேவின் இரண்டாவது இடம் தப்பித்தது!

0
16096
Ipl2023

இன்று விடுமுறை நாளில் ஐபிஎல் 16ஆவது சீசனில் நடைபெறும் இரண்டு போட்டிகளில், முதல் போட்டியில் குஜராத் அகமதாபாத் மைதானத்தில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணிகள் மோதிக்கொண்ட போட்டி நடைபெற்றது!

இந்தப் போட்டிக்கான டாசில் வென்ற லக்னோ அணியின் கேப்டன் குர்னால் பாண்டியா முதலில் பந்துவீச்சை தேர்ந்தெடுத்தார். இதை அடுத்து குஜராத் அணிக்கு துவக்கம் தர வந்த சுப்மன் கில் மற்றும் விருதிமான் சகா இருவரும் அதிரடியில் மிரட்டினார்கள்.

- Advertisement -

இந்த ஜோடி முதல் விக்கட்டுக்கு 12.1 ஓவரில் 142 ரன்கள் சேர்த்தது. சகா 43 பந்தில் 10 பவுண்டரி நான்கு சிக்ஸர்களுடன் 81 ரன் எடுத்து ஆட்டம் இழந்தார். அடுத்து வந்த ஹர்திக் பாண்டியா 15 பந்தில் ஒரு பவுண்டரி இரண்டு சிக்ஸர்கள் உடன் 25 ரன்கள் எடுத்து வெளியேறினார்.

இன்னொரு முனையில் மிகச் சிறப்பாக விளையாடிய சுப்மன் கில் 51 பந்தில் இரண்டு பவுண்டரி மற்றும் ஏழு சிக்ஸர்கள் உடன் 94 ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தார். டேவிட் மில்லர் 12 பந்தில் இரண்டு பவுண்டரி மற்றும் ஒரு சிக்ஸர் உடன் 21 ரன்கள் எடுத்து அவரும் ஆட்டம் இழக்காமல் களத்தில் நின்றார். 20 ஓவர்கள் முடிவில் குஜராத் இரண்டு விக்கட்டுகள் இழப்புக்கு 227 ரன்கள் குவித்தது!

சாதனை இலக்கை நோக்கி களம் இறங்கிய லக்னோ அணிக்கு கைய்ல் மேயர்ஸ் மற்றும் குயிண்டன் டி காக் இருவரும் மிகச் சிறப்பான துவக்கம் தந்தார்கள். இந்த ஜோடி முதல் விக்கட்டுக்கு 8.1 ஓவரில் 88 ரன்கள் சேர்த்தது. மேயர்ஸ் 32 பந்தில் 48 ரன்கள் எடுத்து ஆட்டாமல் இழந்தார். மற்றும் ஒரு துவக்க ஆட்டக்காரர் குயிண்டன் டி காக் 41 பந்தில் 71 ரன்கள் எடுத்து வெளியேறினார். இதற்குப் பிறகு லக்னோ அணியின் வெற்றி வாய்ப்பு தகர்ந்து போனது.

- Advertisement -

லக்னோ அணிக்கு தீபக் ஹூடா 11, ஸ்டாய்னிஸ் 4, பூரன் 3, பதோனி 21, குர்னால் பாண்டியா 0, ஸ்வப்னில் 2* , ரவி பிஸ்னோய் 4* ரன்கள் எடுக்க, 20 ஓவர்கள் முடிவில் லக்னோ 7 விக்கட்டுகள் இழப்புக்கு 171 ரன்கள் எடுத்து, 56 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. குஜராத் தரப்பில் நான்கு ஓவர்கள் பந்துவீசி மோகித் சர்மா 29 ரன்கள் தந்து நான்கு விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார்.

இதன் மூலம் 11 வது ஆட்டத்தில் எட்டாவது வெற்றியைப் பெற்று 16 புள்ளிகள் உடன் முதல் அணியாக பிளே ஆப் சுற்றுக்குள் இந்த ஐபிஎல் சீசனில் குஜராத் அணி நுழைந்தது. லக்னோ அணி 11 ஆட்டத்தில் 11 புள்ளிகள் உடன் மூன்றாவது இடத்தில் தற்பொழுது இருக்கிறது. இந்த ஆட்டத்தில் வென்று இருந்தால் சிஎஸ்கே இருக்கும் இரண்டாவது இடத்திற்கு லக்னோ அணி முன்னேறி இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.