ஐசிசி ஒன்பதாவது டி20 உலகக் கோப்பை தொடரில் இந்தியா அமெரிக்கா அணிகள் மோதிக் கொள்ளும் போட்டி நியூயார்க் நாசாவ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர் அர்ஸ்தீப் தனித்துவ சாதனைகள் படைத்திருக்கிறார்.
இன்றைய போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இந்திய அணியில் எந்தவித மாற்றங்களும் செய்யப்படவில்லை. அமெரிக்க அணியின் கேப்டன் மோனன்க் படேல் காயம் காரணமாக விளையாடவில்லை.
முதல் ஓவரை வீசிய அர்ஸ்தீப் சிங் முதல் பந்திலேயே சயான் ஜஹாங்கீர் விக்கெட்டை கைப்பற்றினார். இதற்கு அடுத்து அதே ஓவரில் அன்ரிஸ் கவுஸ் விக்கெட்டை கைப்பற்றினார். இதற்கு அடுத்து கொஞ்சம் தாக்குபிடித்து விளையாடிய துவக்க ஆட்டக்காரர் ஸ்டீவன் டெய்லர் 30 பந்தில் 24 ரன்கள் எடுத்தார்.
இதைத் தொடர்ந்து அமெரிக்க அணிக்கு கேப்டனாக வந்த அதிரடி வீரர் ஆரோன் ஜோன்ஸ் 22 பந்தில் 11 ரன் எடுத்து ஆட்டம் இழந்தார். நிதீஷ் குமார் சிறப்பாக விளையாடி 23 பந்தில் 27 ரன்கள் எடுத்தார். அமெரிக்க அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 110 ரன்கள் எடுத்தது.
இந்திய அணியின் பந்துவீச்சில் அர்ஸ்தீப் சிங் நான்கு ஓவர்கள் பந்து வீசி 9 ரன்கள் மட்டுமே விட்டுத் தந்து நான்கு விக்கெட் கைப்பற்றினார். டி20 உலக கோப்பையில் ஒரு இந்திய பந்துவீச்சாளரின் மிகச் சிறப்பான பந்துவீச்சு இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்பாக ரவிச்சந்திரன் அஸ்வின் 11 ரன்களுக்கு நான்கு விக்கெட் வீழ்த்தி இருந்தார்.
இதையும் படிங்க : டி20 உ.கோ.. திடீரென கோலிக்கு ஆதரவாக வந்த அம்பதி ராயுடு.. பியூஸ் சாவ்லா தெரிவித்த சம்மதம்
மேலும் இன்றைய போட்டியில் அர்ஸ்தீப் சிங் போட்டியின் முதல் பந்திலேயே விக்கெட் கைப்பற்றி இருந்தார். சர்வதேச டி20 கிரிக்கெட்டில் போட்டியின் முதல் பந்தில் விக்கெட்டை கைப்பற்றிய முதல் பந்துவீச்சாளர் என்கின்ற சாதனையையும் சேர்த்து படைத்திருக்கிறார். இன்றைய போட்டியில் வெற்றி பெறும் அணி இரண்டாவது சுற்றுக்கு முன்னேறும் என்பது குறிப்பிடத்தக்கது.