ரஞ்சி டிராபி 2024.. கோவா அணி 618 ரன்கள்.. அர்ஜுன் டெண்டுல்கர் அதிரடி.. மிஸ் ஆன ஆர்சிபி வீரரின் இரட்டை சதம்

0
2742

கடந்த ஐபிஎல் சீசனில் மும்பை அணிக்காக இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜூன் டெண்டுல்கர் அறிமுகம் செய்யப்பட்டார். ஆல்ரவுண்டரான அவர் சில போட்டிகளில் மட்டுமே விளையாடினாலும், அவரின் பந்துவீச்சில் கொஞ்சம் கூடுதல் வேகம் தேவை என்று முன்னாள் வீரர்கள் அறிவுரை கூறினர்.

இன்னும் சொல்ல வேண்டுமென்றால் அவர் முன்பை விடவும் அதிக வேகத்தில் வீசியிருந்தார். அவர் ரஞ்சி டிராபி கிரிக்கெட்டில் கடந்த ஆண்டு மும்பை அணியில் இருந்து விலகி கோவா அணிக்கு இடம்பெயர்ந்தார். மும்பை அணியில் அதிகளவிலான நட்சத்திர வீரர்கள் இருந்ததால், அர்ஜூன் டெண்டுல்கருக்கு பிளேயிங் லெவனில் இடம் கிடைக்கவில்லை.

- Advertisement -

இதன்பின் கோவா அணிக்காக களமிறங்கிய முதல் போட்டியிலேயே சிறந்த பேட்டிங்கை வெளிப்படுத்தியதோடு, அடுத்தடுத்த போட்டிகளில் நன்றாக பந்தை ஸ்விங் செய்ய கற்றுக் கொண்டார். அதுதான் அவரின் ஐபிஎல் அறிமுகத்திற்கு காரணமாக அமைந்தது. இந்த நிலையில் நடப்பாண்டு ரஞ்சி டிராபி தொடரிலும் கோவா அணிக்காக அர்ஜூன் டெண்டுல்கர் விளையாடி வருகிறார்.

இதனிடையே நேற்று தொடங்கிய ஆட்டத்தில் சட்டீஸ்கர் அணியை எதிர்த்து கோவா அணி களமிறங்கியது. இதில் டாஸ் வென்ற கோவா அணி கேப்டன் தர்ஷன் மிஷால் பேட்டிங்கை தேர்வு செய்தார். முதல் நாள் ஆட்ட நேர முடிவில் கோவா அணி 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 267 ரன்கள் சேர்த்திருந்தது. சுயாஷ் பிரபுதேசாய் 124 ரன்களோடும், ராகுல் திரிப்பாட்டி 12 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

இதன்பின் 2ஆம் நாள் ஆட்டத்தில் ராகுல் திரிப்பாட்டி 40 ரன்களிலும், கேப்டன் தர்ஷன் மிஷால் 46 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இதனிடையே சுயாஷ் பிரபுதேசாய் அதிரடியில் கோவா அணி 400 ரன்களை கடந்து விளையாடியது. சிறப்பாக ஆடிய அவர் இரட்டை சதம் விளாசுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட சூழலில், 197 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். பின்னர் தீப்ராஜ் – அர்ஜூன் டெண்டுல்கர் கூட்டணி இணைந்தது.

- Advertisement -

இருவரும் அதிரடியாக ரன்களை சேர்த்தனர். சிறப்பாக ஆடிய தீப்ராஜ் சதம் விளாசி அசத்த, மற்றொரு பக்கம் அதிரடியாக ஆடிய அர்ஜூன் டெண்டுல்கர் அரைசதம் கடந்தார். இதனால் கோவா அணியின் ஸ்கோர் 600 ரன்களை கடந்தது. அப்போது 60 பந்துகளில் 4 சிக்ஸ், 6 பவுண்டரி உட்பட 70 ரன்கள் சேர்த்திருந்த நிலையில் அர்ஜூன் டெண்டுல்கர் ஆட்டமிழந்தார்.

அதன்பின் கோவா அணி 618 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்த நிலையில், டிக்ளேர் செய்தது. அதன்பின் களமிறங்கிய சட்டீஸ்கர் அணி 2ஆம் நாள் ஆட்ட நேர முடிவில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 73 ரன்களை சேர்த்துள்ளது. மேலும், அர்ஜூன் டெண்டுல்கரின் ஆட்டம் ரசிகர்களை திரும்பி பார்க்க வைத்துள்ளது.