இந்திய டி20 அணிக்கு கேப்டனாக ரோகித் சர்மா 14 மாதங்களுக்குப் பிறகு திரும்பி இருந்தார். ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டி இன்று நடைபெற்றது.
இந்த போட்டியில் இந்திய கேப்டன் ரோகித் சர்மா முதலில் டாஸ் வென்று தமது அணி பீல்டிங் செய்யும் என அறிவித்தார். பிளேயிங் லெவன் எப்படி அமையும் என்று வெளியில் பல கணிப்புகள் இருக்க, அதற்கு நேர்மாறான ஒரு பிளேயிங் லெவனை ரோகித் சர்மா களம் இறக்கினார்.
முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 158 ரன்கள் எடுத்தது. ஆப்கானிஸ்தான் தரப்பில் முகமது நபி 42 ரன்கள் எடுத்தார். இந்திய அணியின் தரப்பில் அக்சர் படேல் மற்றும் முகேஷ் குமார் இருவரும் தலா இரண்டு விக்கெட் கைப்பற்றினார்கள்.
இதற்கடுத்து களம் இறங்கிய ரோகித் சர்மாவை கில் ரன் அவுட் செய்தார். மேற்கொண்டு விளையாடிய இந்திய அணிக்கு சிவம் துபாய் மிகச் சிறப்பாக விளையாடி ஆட்டமிழக்காமல் 60 ரன்கள் எடுக்க இந்திய அணி எளிதாக வெற்றி பெற்றது.
வெற்றிக்குப் பின் பேசிய இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா கூறும் பொழுது ” நேர்மையாக சொல்வது என்றால் இங்கு மிகவும் குளிராக இருக்கிறது. பந்து விரலின் நுனியில் பட்டால் மிகவும் வலிக்கிறது. பந்து என் விரல்களை தாக்கிய பொழுது, விரல்கள் இருப்பதையே உணர முடியவில்லை. ஆனால் இப்போது நான் நன்றாக இருக்கிறேன்.
நிறைய பாசிட்டிவான விஷயங்கள் இருக்கிறது குறிப்பாக எங்களுடைய பவுலிங். பந்துவீச்சுக்கு இது எளிதான கண்டிஷன் கிடையாது. ஆனால் எங்கள் பவுலர்கள் சிறப்பாக செயல்பட்டார்கள்.
கில் ரன் அவுட் செய்த பொழுது கோபம் வந்தது. இது எல்லாம் ஆட்டத்தில் நடக்க கூடியது. நீங்கள் உங்கள் அணிக்காக ரன் எடுக்க விரும்புகிறீர்கள். ஆனால் இப்படி நடக்கும் பொழுது நீங்கள் விரக்தி அடைவீர்கள். கில் அணிக்காக விளையாட விரும்பினார். அவர் ஒரு நல்ல இன்னிங்ஸ் விளையாடவும் செய்தார்.
இதேபோல் பேட்டிகளும் நிறைய பாசிட்டிவான விஷயங்கள் இருக்கிறது. சிவம் துபாய் மற்றும் ஜிதேஷ் சர்மா பேட்டிங் செய்த விதம், அடுத்து திலக் மற்றும் ரிங்கு பேட்டிங் செய்த விதம் சிறப்பானது.
அடுத்த போட்டிகளில் மாற்றம் செய்ய விரும்புகிறீர்களா என்றால், பந்துவீச்சாளர்கள் சில வித்தியாசமான விஷயங்களை செய்து பார்க்க வேண்டும். உதாரணமாக இன்று வாஷிங்டன் சுந்தர் 19 ஆவது ஓவரை வீசினார். இந்த மாதிரியான விஷயங்களை மனதில் வைத்து வித்தியாசமாக செய்ய முயற்சிப்போம். ஆனால் நிச்சயம் வெற்றியை விலை கொடுத்து பரிசோதனைகள் செய்ய மாட்டோம்” என்று கூறியிருக்கிறார்!