தோல்விக்கு காரணம் யாருன்னு அப்புறம் பாத்துக்கலாம்… வேறலெவல்ல ஆடுன இரண்டு பேரை நான் இங்க பாராட்டியே ஆகணும் – பாசிட்டிவாக பேசிய கேஏல் ராகுல்!

0
1290

தோல்வி ஒருபுறம் இருந்தாலும், இன்றைய போட்டியில் சிறப்பாக ஆடிய இரண்டு வீரர்களை நான் பாராட்ட வேண்டும். மிகுந்த நம்பிக்கையை கொடுத்தார்கள் என்று நேர்மறையாக பேசியுள்ளார் கேஎல் ராகுல்.

கடந்த ஏப்ரல் 3ஆம் தேதி சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணிகள் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் மோதின. இதில் டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தார் கேஎல் ராகுல்.

- Advertisement -

முதலில் பேட்டிங் செய்த சிஎஸ்கே அணியில், துவக்க வீரர்கள் ருத்துராஜ் மற்றும் டெவான் கான்வே இருவரும் முதல் ஓவரில் இருந்தே அதிரடியாக விளையாடி பவர்-பிளே ஓவர்களில் 79 ரன்கள் குவித்தனர். டெவான் கான்வே 47 ரன்கள், ருத்துராஜ் 57 ரன்கள் அடித்து ஆட்டம் இழந்தனர்.

இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 110 ரன்கள் சேர்த்தது. அடுத்து வந்த தூபே(27), மொயின் அலி(19) இருவரும் சிறிது பார்ட்னர்ஷிப் அமைத்து அவுட்டாகினர். தோனி 3 பந்துகளில் 2 சிக்ஸர்கள் அடித்தார். இறுதியாக ராயுடு 14 பந்துகளில் 27 ரன்கள் அடித்து களத்தில் நிற்க 20 ஓவர்களில் சிஎஸ்கே அணி 217/7 ரன்கள் குவித்தது.

218 ரன்கள் இலக்கை சேஸ் செய்த லக்னோ அணியும் சிறப்பாக துவங்கியது. கேஎல் ராகுல் மற்றும் கைல் மேயர்ஸ் ஜோடி முதல் விக்கெட்டுக்கு 79 ரன்கள் சேர்த்தபோது, கைல் மேயர்ஸ்(53) விக்கெட்டை தூக்கினார் மொயின் அலி. 6 ஓவரில் 80/1 ரன்கள் அடித்து வலுவான நிலையில் லக்னோ அணி இருந்தது.

- Advertisement -

பின்னர், கேஎல் ராகுல்(20), ஸ்டாயினிஷ்(21), க்ருனால் பாண்டியா(9) ஆகியோரின் விக்கெட்டை சொற்ப ரன்களுக்கு தூக்கினார் மொயின் அலி. அடுத்து வந்த நிக்கோலஸ் பூரன்(32) , ஆயுஸ் பதோனி(23) இருவரும் சிறிது நேரம் அதிரடியாக விளையாடினால், நீண்ட நேரம் பார்ட்னர்ஷிப் அமைக்க முடியவில்லை.

20 ஓவர்கள் முடிவில் லக்னோ அணி 205 ரன்கள் மட்டுமே எடுத்தது. 12 ரன்கள் வித்தியாசத்தில் சிஎஸ்கே அணி வெற்றி பெற்றது. போட்டி முடிந்தபின் பரிசளிப்பு நிகழ்வில் பேசிய கேஎல் ராகுல்,

“டாசை வென்ற பிறகு பவுலிங்கில் எங்களுக்கு சிறப்பான துவக்கம் கிடைக்கவில்லை. எதிரணி பேட்ஸ்மன்கள் இவ்வளவு அபாயகரமாக இருக்கும்பொழுது, கண்டிப்பாக எங்களது பவுலர்கள் அதற்கு விலை கொடுத்து தான் ஆகவேண்டும். ருத்துராஜ் மற்றும் கான்வே இருவரிடமும் நிறைய கற்றுக்கொள்ள வேண்டியது இருக்கிறது. பவுலிங்கில் எந்த லைன் மற்றும் லென்த் வீச வேண்டும் என்று புரிந்து கொள்வதற்குள் இந்த இருவரும் வெளுத்து வாங்கிவிட்டனர்.

இன்றைய போட்டியில் எங்களுக்கு இரண்டு பேர் மிகச்சிறப்பாக செயல்பட்டார்கள். கைல் மேயர்ஸ் அபாரமாக விளையாடி நல்ல துவக்கம் அமைத்துக் கொடுத்தார். சர்வதேசப் போட்டிகளில் மிகச்சிறப்பான ஃபார்மில் இருந்து, இங்கே வந்திருக்கிறார். இரண்டு போட்டிகளிலும் நன்றாக செயல்பட்டு கொடுத்தார்.

அதேபோல் ரவி பிஸ்னாயுடன் கடந்த சில சீசன்களாகவே விளையாடி வருகிறேன். எப்போதெல்லாம் விக்கெட் தேவையோ, அப்போது சரியாக விக்கெட் எடுத்துக் கொடுக்கிறார். கையை விட்டு ஆட்டம் செல்லும்பொழுது ரன்களை கட்டுப்படுத்தி மீண்டும் ஆட்டத்திற்குள் கொண்டு வருகிறார். அவரது பந்துவீச்சில் நல்ல முதிர்ச்சி தெரிகிறது. இன்றைய போட்டியில் பந்துவீச்சில் ஒற்றை நம்பிக்கையாக இருந்தார்.” என்று இருவரையும் கேஎல் ராகுல் பாராட்டினார்.