இங்கிலாந்து அணிக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியில் 24 வயது வீரரான சிஎஸ்கே வேகப்பந்துவீச்சாளர் அன்சூல் காம்போஜ் அறிமுகமாகியிருக்கிறார். இதன் மூலம் மான்செஸ்டர் மைதானத்தில் 35 ஆண்டுகளுக்குப் பிறகு அறிமுகம் ஆகும் இந்திய வீரர் என்ற பெருமையை அவர் பெற்றிருக்கிறார்.
இதற்கு முன்பு இதே மைதானத்தில் தான் இந்திய அணிக்காக அதிக டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்திய சுழற் பந்துவீச்சாளர் அணில் கும்ப்ளே அறிமுகமானார். தற்போது அதே போல் அன்சூல் காம்போஜ் அறிமுகமாகி இருப்பதால் அவரும் கும்ப்ளே போல் சாதனை படைப்பாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
ஒரே ஒற்றுமை:
இந்த சூழலில் அன்சூல் காம்போஜ்க்கும் அணில் கும்ப்ளேக்கும் ஒரு வரலாற்று ஒற்றுமை இருக்கின்றது. ஏனென்றால் இருவருமே டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரே இன்னிங்சில் 10 விக்கெட்டுகள் கைப்பற்றி அசத்திருக்கின்றனர்.
கும்ப்ளே பாகிஸ்தானுக்கு எதிராக டெல்லியில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் ஒரே இன்னிங்சில் 10 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தி இருந்தார். இது போல் ஹரியானா அணிக்காக விளையாடிய போது, அன்சூல் காம்போஜும், ரஞ்சி கோப்பை கிரிக்கெட்டில் கேரள அணிக்கு எதிராக ஒரே இன்னிங்ஸில் 10 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்தார். தற்போது ஆகாஷ் தீப்க்கு பதிலாக அன்சூல் காம்போஜ் அணியில் சேர்ந்திருக்கின்றார்.
அஸ்வின் பாராட்டு:
அன்சூல் குறித்து குறித்து ஏற்கனவே பாராட்டியுள்ள தமிழக கிரிக்கெட் வீரர் அஸ்வின், “பும்ரா, ஜாகிர் கான் போல் ஆன்சூல் காம்போஜும் யுக்திகளை பயன்படுத்தி களத்தில் விளையாடக்கூடிய வீரர்” என்று கூறினார். “தாம் சிஎஸ்கே அணிக்காக விளையாடிய போது அன்சூல் காம்போஜ் களத்தில் சிறப்பாக செயல்பட்டதை பார்த்தேன்.”
இதையும் படிங்க: 4வது டெஸ்ட்.. இந்திய அணியில் 3 அதிரடி மாற்றங்கள்.. இங்கிலாந்து மாஸ் மூவ்.. முழு தகவல்கள்
“இந்திய அணி அவரை பயன்படுத்தினால் வேகப்பந்து வீச்சு படை மேலும் அபாயகரமாக மாறும்” என்றும் அவர் கூறியிருந்தார். தற்போது இந்திய அணியும் அந்த முடிவை தான் எடுத்திருக்கின்றது. இதேபோன்று அன்சூல் காம்போஜும் நல்ல பேட்ஸ்மேன் என்பதால் இந்திய அணியின் பேட்டிங் பலமும் அதிகரித்து இருக்கின்றது.






