2025 ஆம் ஆண்டு 18 ஆவது ஐபிஎல் சீசன் நாளை மறுநாள் மீண்டும் தொடங்க இருக்கிறது. தற்போது இதில் ஆறு அணிகளுக்கு பிளே ஆப் வாய்ப்பு இருக்கும் நிலையில், அது எந்த அளவில் இருக்கிறது என்பது குறித்து பார்க்கலாம்.
இந்தியா பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையேயான பதட்டத்தின் காரணமாக ஐபிஎல் தொடர் நடுவில் ஒரு வாரம் நிறுத்தப்பட்டது. இந்த நிலையில் மீண்டும் நாளை மறுநாள் துவங்குகிறது. இரண்டாவது துவக்கத்தில் முதல் போட்டியில் ஆர்சிபி மற்றும் கேகேஆர் அணிகள் மோதிக்கொள்ள இருக்கின்றன.
அருமையான வாய்ப்பில் மூன்று அணிகள்
தற்போது புள்ளி பட்டியலில் குஜராத் மற்றும் ஆர்சிபி 11 போட்டிகளில் 8 போட்டிகளில் வென்று 16 புள்ளிகள் எடுத்து முதல் இரண்டு இடங்களில் இருக்கின்றன. இந்த இரண்டு அணிகளுமே அடுத்து தமக்கு இருக்கும் மூன்று போட்டிகளில் ஒரு போட்டியை வென்றாலும் பிளே ஆப் சுற்றுக்கு தகுதியைப் பெற்று விடும். ஒருவேளை மூன்று போட்டிகளை தோற்றால் கூட ரன் ரேட் இருந்தால் ஒரு சிறிய வாய்ப்பும் இருக்கலாம்.
இதற்கு அடுத்து மூன்றாவது இடத்தில் இருக்கும் பஞ்சாப் கிங்ஸ் 11 போட்டிகளில் 15 புள்ளிகள் எடுத்து இருக்கிறது. இந்த அணியும் தமக்கு இருக்கும் மூன்று போட்டிகளில் ஒரு போட்டியை வென்றால் நேரடியாக பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்று விட முடியும். ஆனால் மூன்று போட்டிகளையும் தோற்றால் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேற முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.
போராடும் மூன்று அணிகள்
இந்த நிலையில் புள்ளி பட்டியலில் நான்காவது இடத்தில் இருக்கும் மும்பை இந்தியன்ஸ் அணி 12 போட்டிகளில் ஏழு வெற்றிகள் உடன் 14 புள்ளிகள் எடுத்து இருக்கிறது. இந்த அணி தகுதி பெறுவதற்கு இப்போதைக்கு இரண்டு போட்டிகளையுமே வெல்ல வேண்டும். ஒரு போட்டியை வென்று ஒரு போட்டியை தோற்கும் என்றால் நல்ல ரன் ரேட் இருக்க வேண்டும். மற்ற அணிகளைப் பொறுத்து வாய்ப்புகள் கிடைக்கும்.
இதையும் படிங்க : தோனி உடன் ஸ்ரேயாசை ஒப்பிட வேணாம்னு நினைச்சாலும்.. இந்த விஷயத்தில் ஒரே மாதிரி இருக்காங்க – ஆஸி டாம் மூடி பேட்டி
இதைத்தொடர்ந்து ஐந்தாவது இடத்தில் டெல்லி கேப்பிட்டல் 11 போட்டிகளில் 13 புள்ளிகள் எடுத்து இருக்கிறது. இந்த அணி அடுத்து தமக்கு இருக்கும் மூன்று போட்டிகளில் இரண்டு போட்டிகளை வென்றால் மட்டுமே பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற முடியும். இந்த மூன்று போட்டிகளில் இரண்டு போட்டிகள் பிளே ஆப் சுற்றில் இருக்கும் பஞ்சாப் மற்றும் மும்பை உடன் இருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த இடத்தில்தான் ப்ளே ஆப் வாய்ப்புகள் சுவாரசியமாகிறது. மேலும் லக்னோ அணி 11 போட்டியில் 10 புள்ளிகள் எடுத்து இருக்கிறது. இந்த அணி அடுத்த மூன்று போட்டிகளையும் வென்று நல்ல ரன் ரேட் எடுத்திருந்தால் ஒரு வாய்ப்பு இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.






