பேட்டிங்க்கு முன் தோனி தன் மட்டையை கடிப்பதற்கு இதுதான் காரணம் – உண்மையை கூறிய அமித் மிஷ்ரா

0
4691
Amit Mishra about MS Dhoni biting his bat

ஐ.பி.எல்-ன் மொத்த சீசன்களையும் எடுத்துக்கொண்டால் ஒவ்வொரு சீசனிலும் ஒவ்வொரு வீரர்கள் பேசுபொருளாக இருந்திருப்பார்கள். ஆனால் ஒட்டுமொத்த ஐ.பி.எல் சீசன்களையும் எடுத்துக்கொண்டால் ஒரு வீரர் பெயர் தொடர்ந்து இரசிகர்களின் பேச்சுப்பொருளாகவே இருக்கிறதென்றால் அது மகேந்திர சிங் தோனியின் பெயர்தான்.

உலக கிரிக்கெட்டில் அதிக புகழுடைய சச்சின் அவர்களுக்குப் பிறகு, சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றாலும் பழைய புகழோடு இருப்பது மகேந்திர சிங் தோனிதான். இன்னும் சொல்லப்போனால் அவரது புகழ் சமீப ஆண்டுகளில் ஐ.பி.எல் தொடர்களில் அதிகரித்துக் கொண்டேதான் இருக்கிறது.

41 வயதான அவரின் உடற்தகுதியும், பினிசிங் செய்யும் திறனும் இன்னும் கொஞ்சம் கூட குறையவே இல்லை. நடப்பு ஐ.பி.எல் தொடரில் முதல் ஆட்டத்தில் கொல்கத்தா அணியுடன் அரைசதமடித்தது, மும்பை அணியுடன் கடைசி பந்தில் பவுண்டரி அடித்து ஆட்டத்தை வெற்றிகரமாக முடித்தது என அவரது பினிசிங் திறன் கூர்மையாகிக்கொண்டே போகிறது. நேற்று டெல்லி அணிக்கு எதிரான போட்டியில், தொடர்ச்சியாய் இரு இரண்டு ரன்களை அவர் ஓடி எடுத்தபோது, மறுமுனையிலிருந்த அவர் வயதை ஒத்த டேரன் பிராவோவால் வேகமாக ஓட முடியவில்லை. ஆனால் தோனி சர்வ சாதாரணமாக ஓடி ரன் எடுத்ததே அவரது உடற்தகுதிக்கு நல்ல சாட்சி.

நேற்று ருதுராஜ்-கான்வோ ஜோடியின் மிகச் சிறப்பான ஆட்டத்தினால் டெல்லி அணிக்கு எதிரா சென்னை அணி 208 ரன்களை குவித்தது. இந்தப் போட்டியில் பேட்டிங்கில் ஐந்தாவது வரிசையில் இறங்கிய மகேந்திர சிங் தோனி வழக்கம் போல சென்னை இன்னிங்சை சிறப்பாக முடித்தார். ராயுடு, உத்தப்பா, மொயீன் வரிசையாக ஆட்டமிழக்க, 8 பந்துகளைச் சந்தித்த தோனி 21 ரன்களை குவித்தார். ஸ்ட்ரைக் ரேட் 262.5!

நேற்று டெல்லி அணிக்கு எதிராக பேட்டிங்கில் களமிறங்குவதற்கு முன்னால், பெவிலினியனில் அமர்ந்திருந்த தோனி, பேட்டை வாயில் வைத்து சாப்பிடுவதைப் போல் கடித்துக்கொண்டிருந்தார். ஏன் இப்படி செய்கிறார்? என்று அதைப் பார்த்த இரசிகர்களுக்கு ஒரு சந்தேகம் இருந்தது. இதுக்குறித்து அமித் மிஷ்ரா தனது ட்வீட்டர் பக்கத்தில் “அவர் ஏன் பேட்டை சாப்பிடுவதுபோல் செய்கிறார் என்றால், அவர் பேட்டை சுத்தமாக வைத்துக்கொள்ள விரும்புவார். அதனால் பேட்டில் டேப் இல்லை கயிறு எதையும் வெளியில் வர விடமாட்டார்” என்று தெரிவித்திருக்கிறார்!