இந்திய அணியின் இளம் வீரர் திலக் வர்மா மூன்று வடிவ கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாடும் திறமை கொண்ட சூப்பர் ஸ்டார் வீரர் என இந்திய முன்னாள் வீரர் அம்பதி ராயுடு பாராட்டி இருக்கிறார்.
நேற்று இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் சென்னை சேப்பாக்கத்தில் 55 பந்துகளை சந்தித்து இறுதிவரை ஆட்டம் இழக்காமல் 72 ரன்கள் எடுத்து இந்திய அணியை திலக் வர்மா வெற்றி பெற செய்தார். அவரது பொறுப்பான ஆட்டத்தில் காரணமாக தற்பொழுது பலர் அவரை பாராட்டி வருகிறார்கள்.
இதுகுறித்து பேசி இருக்கும் அம்பதி ராயுடு கூறும் பொழுது “திலக் வர்மா ஒரு சூப்பர் ஸ்டார் வீரர். அவர் ஹைதராபாத்தில் வளர்ந்து வருவதை நான் பார்த்திருக்கிறேன். அவர் நான்கு அசாதாரணமான ஆட்டங்களை தற்பொழுது ஆடியிருக்கிறார். சூரியகுமார் கேப்டன் ஆனதிலிருந்து திலக் வர்மாவுக்கு கொடுத்த நம்பிக்கை, மேலும் அவர் வெளியில் காட்டிய நம்பிக்கையை திலக் வர்மா திருப்பி இரண்டு மடங்காக அவருக்கு கொடுத்திருக்கிறார்”
“இந்தியாவுக்கு ஒரு சூப்பர் ஸ்டார் வீரர் கிடைத்திருக்கிறார் என்று நான் நினைக்கிறேன். அவர் மூன்று வடிவ கிரிக்கெட்டிலும் விளையாட வேண்டும் என்று நான் விரும்புகிறேன். அவர் வெறும் டி20 வீரர் மட்டும் கிடையாது. அவர் நேற்று காட்டிய முயற்சியை கருத்தில் கொண்டு பார்க்கும் பொழுது அவருக்கு மேட்ச் வின்னர் ஆகும் திறமை இருப்பது தெரிகிறது. பல ஆண்டுகள் அவர் இந்திய கிரிக்கெட்டில் அனைத்து வடிவங்களிலும் சிறப்பாக இருக்க முடியும்”
“திலக் வர்மாவுக்கு இங்கிலாந்து அணியினர் ஷார்ட் பால் திட்டத்தை கொண்டு வந்தார்கள். அவர் விளையாடுவதற்கு இடம் கொடுக்காமல், பந்தை பைன் லெக்கில் அடிக்க வைக்க நினைத்தார்கள். ஆனால் அவர்கள் கொண்டு வந்த எல்லா திட்டத்திற்கும் திலக் வர்மாவிடம் பதில் இருந்தது”
இதையும் படிங்க : அகர்கர் பதவிக்கு மட்டும் வரவே மாட்டேன்.. அதுக்கான காரணம் இதுதான் – அஸ்வின் பேச்சு
“அவர் வேகத்தை மிகச் சிறப்பாக பயன்படுத்தினார். பேட்டிங்கில் கோணம் மிகவும் முக்கியமானது. அவர் பந்துகளை எங்கு அடிக்க வேண்டுமோ அந்த இடத்தில் மிகச் சரியாக அடித்தார். சரியான அணுகுமுறை மற்றும் செயல் திறனுடன் அவர் விதிவிலக்காக இருந்தார். மேலும் இங்கிலாந்து இதே அணுகு முறையில் அவரிடம் மீண்டும் திரும்பி வரும் என்று நான் நினைக்கவில்லை” என்று தெரிவித்திருக்கிறார்.